பாஜக ஆளும் கர்நாடகாவில் வேளாண் சட்டங்களைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம்

பாஜக ஆளும் மாநிலமான கர்நாடகாவில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நேற்று மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் வேளாண் துறை சார்ந்த 3 சட்டங்கள், கர்நாடக அரசு கொண்டுவந்த வேளாண் அவசர சட்ட மசோதா ஆகிவற்றுக்கு அம்மாநில விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய, மாநில அரசுகளின் விவசாய விரோத போக்கை கண்டித்து மாநில விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு நேற்றுமுழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. இதற்கு காங்கிரஸ், மஜத, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய குடியரசு கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், கன்னட சங்கங்கள், கர்நாடக லாரி உரிமையாளர் சங்கம்உட்பட 300-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.

பெங்களூரு, மைசூரு, ஹூப்ளி, கல்புர்கி உட்பட மாநிலம் முழுவதும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 50 சதவீதத்துக்கும் குறைவான அளவிலேயே அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்கள் இயங்கிய நிலையில், பெரும்பான்மையான தனியார் நிறுவனங்கள் இயங்கவில்லை.

பெங்களூரு டவுன்ஹால், மைசூரு வங்கி சதுக்கம், சுதந்திரபூங்கா, மெஜஸ்டிக் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில்ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனால் பெங்களூருவில் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மைசூரு, மண்டியாவில் கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

பெல்காமில் விவசாயிகளின் போராட்டத்தை மீறி அரசு பேருந்துகள் இயக்கப்பட்டதால், விவசாயிகள் போக்குவரத்து ஊழியர்களின் கால்களில் விழுந்துகும்பிட்டு தங்களது போராட்டத்துக்கு ஆதரவு கோரினர்.

ஹூப்ளி, ஷிமோகா பாகல்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

இதுகுறித்து முதல்வர் எடியூரப்பா கூறும்போது, “போராட்டம் நடத்தும் விவசாயிகளை நான் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறேன். விவசாயிகளின் சந்தேகம், கோரிக்கை, வேண்டுகோள் தொடர்பாக விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன். மத்திய, மாநில அரசு கொண்டுவந்துள்ள்ள சட்டங்களால் விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்கள்’’ என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top