மத்தியில் ஆள்வது தேசிய ஜனநாயகக் கூட்டணி அல்ல! சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பரபரப்பான பேட்டி

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீண்டகாலமாக இருந்த கட்சிகள் தற்போது அங்கு இல்லை. மத்தியில்ஆள்வது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அல்ல என்று சஞ்சய் ராவத்  தெரிவித்தார்.

மத்தியில் தற்போது ஆள்வது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அல்ல. அது வித்தியாசமானது. விவசாயிகளின் நலனுக்காக கூட்டணியிலிருந்து வெளியேறிய சிரோன்மணி அகாலி தளம் கட்சிக்குப் பாராட்டுகள் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மத்திய அமைச்சர் பதவியிலிருந்து அகாலி தளம் கட்சியின் எம்.பி. ஹர்சிம்ரத் கவுர் கடந்த இரு வாரங்களுக்கு முன் விலகினார்.

ஆனால், இந்த மசோதாக்களுக்குத் தொடர்ந்து விவசாயிகள் தரப்பில் போராட்டங்களும், எதிர்ப்புகளும் எழுந்தன. எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தன. ஆனால், அனைத்தையும் பொருட்படுத்தாமல், நாடாமன்றத்தில் இந்த 3 மசோதாக்களையும் மத்திய அரசு நிறைவேற்றியது.

இதையடுத்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக சிரோன் மணி அகாலிதளம் கட்சி நேற்று அறிவித்தது. பாஜக கூட்டணியில் கடந்த 1997-ம் ஆண்டு முதல் இருந்துவரும் அகாலி தளம் வேளாண் பிரச்சினையால் விலகியுள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் நிருபர்களுக்கு மும்பையில் இன்று பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:

”பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சிரோன்மணி அகாலி தளம் விலகியது வருந்தத்தக்க நிகழ்வுதான். ஆனால் அதேசமயம், விவசாயிகளின் நலனுக்காக பதவிகளை உதறி, கூட்டணியிலிருந்து வெளியேறிய அகாலி தளம் கட்சியின் முடிவை சிவசேனா வரவேற்கிறது. அகாலி தளத்துக்குப் பாராட்டுகள்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இரு தூண்களாக சிவசேனாவும், அகாலி தளம் கட்சியும் இருந்தன. இரு கட்சிகளும் பாஜகவின் ரத்தமும் சதையும்போல் நெருங்கி இருந்தன. மற்ற கட்சிகள் அனைத்தும் அதிகாரத்துக்காக இணைந்தவைதான்.

ஆனால், கடந்த ஆண்டு மகாராஷ்டிர அரசியல் சிக்கலால் என்டிஏ கூட்டணியிலிருந்து சிவசேனா விலகியது. இப்போது விவசாயிகள் நலனுக்காக அகாலி தளம் விலகியுள்ளது. இது வருத்தப்பட வேண்டிய நிகழ்வு.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நீண்டகாலத் தூண்கள் தற்போது அங்கு இல்லை. அப்படி இருக்கும்போது இப்போதுள்ள என்டிஏ கூட்டணியை தேசிய ஜனநாயகக் கூட்டணி என எவ்வாறு அழைக்க முடியும். இது வித்தியாசமான கூட்டணி”.என்று சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

பாஜக தலைமையிலான கூட்டணியிலிருந்து கடந்த இரு ஆண்டுகளுக்குள் 3 முக்கியக் கட்சிகள் விலகியுள்ளன. ஏற்கெனவே தெலுங்குதேசம் கட்சி, சிவசேனா கட்சி ஆகியவை விலகிவிட்ட நிலையில், தற்போது 3-வது கட்சியாக சிரோன்மணி அகாலி தளம் விலகியுள்ளது.

ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து தரவில்லை என்பதால் தெலங்குதேசம் கட்சி என்டிஏ கூட்டணியிலிருந்து விலகியது. மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட அரசியல் குழப்பம், முதல்வர் பதவியைப் பிரித்துக்கொள்வதில் ஏற்பட்ட தகராறு போன்றவையால் பாஜக, சிவசேனா இடையே பெரும் மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் சிவசேனா கட்சியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top