மேல்சட்டையின்றி பஞ்சாப் விவசாயிகள் அமிர்தசரஸியில் ரயில் மறியல் போராட்டம்!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ரயில்வே பாதையில் சட்டையைக் கழற்றி விட்டு வெறும் மார்பு தெரிய விவசாயிகள் சமீபத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேல்சட்டை இல்லாமல் அவர்கள் ரயில்வே இருப்புப்பாதையில் அமர்ந்து பாஜக தலைமை அரசுக்கு எதிராக கோஷமிட்டு, வேளாண் மசோதக்களை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தினர்.

கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி என்ற அமைப்பைச் சேர்ந்த விவசாயிகள் செப்.24ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர், இந்நிலையில் சனிக்கிழமையன்று தேவிதஸ்புரா கிராமத்தில் இருப்புப் பாதையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி பொதுச் செயலாளர் சர்வன் சிங் பாந்தர் செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “விவசாயிகள் தங்கள் குர்த்தாக்கள், சட்டைகளை கழற்றிவிட்டோம், அரசுக்கு எங்கள் குரல் கேட்கட்டும்” என்றார்.

இந்தக் கமிட்டி செப்டம்பர் 29 வரை ரயில் மறியல் போராட்டத்தை நீட்டித்துள்ளது.

விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தைத் தொடர்ந்து சிறப்பு பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

மத்திய அரசின் விவசாயச் சட்டங்கள் குறைந்தபட்ச ஆதாரவிலை முறையை ஒழிப்பதாகும் என்று அஞ்சுகின்றனர், ஆனால் மத்திய அரசு இதனை மறுத்து வருகிறது. மத்திய அரசு மறுத்தாலும், எம்எஸ்பி முறை போகாது என்று கூறினாலும் கொள்முதலைக் குறைத்து வருகிறது, இதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக இதனை ஒழிக்க அரசு திட்டமிடுவதாக விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

வேளாண் மசோதாக்கள் குடியரசுத் தலைவர் கையெழுத்துக்காகக் அவருடைய அலுவலகத்தில் காத்திருக்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top