கொரோனா வைரஸ்; அடிக்கடி தனது வடிவத்தை மாற்றி கொள்கிறது- மருத்துவ ஆய்வில் தகவல்

கொடுமையான கொரோனா வைரஸ் அடிக்கடி தனது வடிவத்தை மாற்றி கொள்கிறது என்று மருத்துவ நிபுணர்களின் ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் உயிர்கொல்லியான கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக உள்ளனர்.

அந்த வைரசின் தன்மை, தோற்றம் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து அதை தடுப்பதற்கான மருந்தை உருவாக்க பல்வேறு கட்ட சோதனைகள் நடந்து வருகிறது.

ஆனால், கொரோனா வைரஸ் மருத்துவ நிபுணர்களுக்கு கடும் சவாலாக இருந்து வருகிறது. ஒருவரின் உடலில் நுழையும் கொரோனா வைரஸ் முதலில் நுரையீரலை தாக்குகிறது. பின்னர் மற்ற உறுப்புகளையும் பாதிப்படைய செய்கிறது.

இதையடுத்து வைரசின் தன்மை பற்றி கணிக்க முடியாதபடி உள்ளதாக ஏற்கனவே நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில் கொரோனா வைரஸ் தனது வடிவத்தை அடிக்கடி மாற்றிக் கொள்கிறது என்று தெரிய வந்திருக்கிறது. அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கூறி இருப்பதாவது:-

“கொரோனா வைரசின் மரபணுவில் உள்ள கருவமிலத்தின் 5 ஆயிரம் செயல்வரிசை ஆய்வு செய்யப்பட்டது. அதில் வைரஸ் அடிக்கடி தனது வடிவத்தை மாற்றிக்கொண்டு வந்திருப்பதை கண்டறிந்தனர். அந்த உருமாற்றம் மனிதர்களை வைரஸ் இன்னும் விரைவாகவும், எளிதாகவும் தொற்றும் வகையில் அமைந்துள்ளது.

ஆனாலும் மனிதர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கும் வகையில் அந்த மாற்றங்கள் இருக்கவில்லை. மேலும் வைரசால் ஏற்படும் பாதிப்புகளிலும் எந்த மாற்றமும் இருக்க போவதில்லை.

எந்த ஒரு வைரசும் பரவிக்கொண்டிருக்கும் போது தனது உருவத்தை மாற்றிக்கொள்ளும். பெரும்பாலும் அந்த மாற்றங்களால் மிகப்பெரிய விளைவுகள் ஏற்படாது.

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும் அந்த மருந்து கொடுக்கும் எதிர்ப்பாற்றலையும் மீறி உடலில் தொற்றும் வகையில் வைரஸ் தன்னை உருமாற்றிக் கொள்ளலாம். அதற்கு ஏற்ப தடுப்பூசியிலும் அடிக்கடி மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே புளூ காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் அந்த நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தை எதிர்கொள்ளும் திறன் பெற்றிருந்ததால் அந்த தடுப்பு மருந்தை மாற்றி அமைக்க வேண்டி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top