நீட் தேர்வில் ஓபிசி இட ஒதுக்கீடு: சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு இடைக்கால தடை இல்லை;சுப்ரீம் கோர்ட்டு

நீட் தேர்வில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

நீட் தேர்வில் அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழகத்தை சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளும், தமிழக அரசும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தன.

இந்த மனுக்களை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, மருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எத்தனை சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்குவது? என்பது தொடர்பாக மத்திய அரசு ஒரு குழுவை அமைத்து 3 மாதங்களில் முடிவெடுக்க கடந்த மாதம் 27-ந்தேதி உத்தரவிட்டது. மேலும் அடுத்த கல்வி ஆண்டில் இருந்து அந்த குழுவின் முடிவை அமல்படுத்தவும் தீர்ப்பு வழங்கியது.

சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அ.தி.மு.க. தரப்பிலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த மனுக் கள் ஏற்கனவே கடந்த மாதம் 14-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, இந்த மனுக்கள் மீது பதிலளிக்க மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணை இரு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மீண்டும் இந்த வழக்கு நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான காணொலி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் வி.கிரி, ஐகோர்ட்டு தீர்ப்புக்கு இடைக் கால தடை பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இந்திய மருத்துவ கவுன்சில் தரப்பில் ஆஜரான வக்கீல் கவுரவ் சர்மா, இட ஒதுக்கீடு தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சில் முடிவு எதையும் எடுக்க முடியாது என்றும் மத்திய அரசு மட்டுமே அதை தீர்மானிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

தி.மு.க. தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், இட ஒதுக்கீடு தொடர்பான குழு மத்திய அரசால் ஏற்கனவே நியமிக்கப்பட்டு கடந்த 7-ந்தேதி இந்த குழுவின் கூட்டம் நடைபெற்றுள்ளது என்று தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை எதையும் விதிக்க முடியாது எனக்கூறி வழக்கின் மீதான விசாரணையை அடுத்த மாதம் 13-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top