காவல்துறை மரியாதையுடன் பாடகர் எஸ்.பி.பி.யின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் அவரது பண்ணை தோட்டத்தில் காவல்துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்(வயது 74) நேற்று மரணம் அடைந்தார். இந்திய இசை உலகில் நீங்காத இடம் பிடித்தவரும், பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மறைவு திரை உலகத்தினரையும், அவரது ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் நேற்று மதியம் 3.50 மணி அளவில் வீட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு அவருடைய உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினார்கள்.

இதனையடுத்து நேற்று இரவு 8 மணிக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் சென்னை செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை இல்ல வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது வழி நெடுகிலும் அவரது உடலுக்கு ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

கொரோனா தொற்று காலம் என்பதால் பொது மக்கள் பெரும் எண்ணிக்கையில் கூடுவதை தவிற்பதற்காக, அப்பகுதியில் சுமார் 500 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். எஸ்.பி.பி உடலுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று கூறப்பட்ட நிலையில், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பொதுமக்களுக்கும் சில கட்டுப்பாடுகளுடன் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர் என்று  காவல்துறை எஸ்.பி.அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் வந்துள்ளனர். பாடகர் மனோ, இயக்குனர்கள் அமீர், பாரதிராஜா உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இந்தநிலையில் அவருக்கு தமிழக அரசு மரியாதை செய்யவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் கேட்டுகொண்டதன் அடிப்படையில், அவரது உடல் போலீசார் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது

அதன்படி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் காம்தார் நகர் இல்லத்தில் இருந்து தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை இல்லத்தில் வைக்கப்பட்டது.

12.30 மணியளவில் காவல்துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க  எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top