தனது குரலால் எண்ணற்ற உள்ளங்களில் வாழும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார்!

தனது குரலால் கோடிக்கணக்கான தமிழர்களின் உள்ளத்தில் வாழ்ந்த பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்.

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (வயது 74).  திரையுலகில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் 50 ஆண்டுகளாக பல்லாயிரம் பாடல்களை பாடி சாதனை நிகழ்த்திய அவருக்கு கடந்த மாதம் 5-ந்தேதி கொரோனா தொற்று ஏற்பட்டு சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள எம்.ஜி.எம். தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். லேசான கொரோனா அறிகுறிகள் உள்ளன என்றும் விரைவில் குணமாகி வீடு திரும்பிவிடுவேன் என்றும் வீடியோவில் அவர் பேசி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 13-ந்தேதி அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றினர். செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகள் பொருத்தியும் வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை பெற்றும் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவர் குணமடைய கூட்டு பிரார்த்தனை செய்தனர். அதன்பிறகு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் விழிப்புடன் இருக்கிறார் என்றும் பேசுவதை புரிந்து கொள்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக வெளியான தகவலை அவரது மகன் எஸ்.பி.பி.சரண் மறுத்தார். கொரோனா தொற்றில் இருந்து மீண்டு விட்டார் என்றும் கூறினார். இதனால் ரசிகர்களும் திரையுலகினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

51 நாட்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை மீண்டும் திடீரென்று மோசம் அடைந்தது. இதுகுறித்து மருத்துவமனை உதவி இயக்குனர் டாக்டர் அனுராதா பாஸ்கரன் நேற்று வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், “எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த 5-ந்தேதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு எக்மோ உள்ளிட்ட இதர உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மோசம் அடைந்தது. இதையடுத்து அவருக்கு அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. உடல்நிலையை மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இன்று காலமானார்.  பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று பிற்பகல் 1.04 மணிக்கு காலமானார் என்று இயக்குனர் வெங்கட்பிரபு தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தமிழ் திரைப்பட கலாச்சாரத்தின் தவிர்க்கமுடியாத ஒரு பகுதி அவரை பாதுகாத்திருக்கவேண்டியது தமிழக அரசின் கடமை. ஆனால்,ஒருநாள் கூட தமிழக முதல்வரோ, அமைச்சர்களோ அவரை மருத்துவமனையில் சென்று பார்க்ககூட இல்லை,அவரை நோயிலிருந்து குணபடுத்தவேண்டிய கடமையை தமிழக அரசு செய்யவில்லை.எஸ்.பி.பி யின் மரணத்தை தமிழக அரசு நினைத்திருந்தால் தள்ளிப்போட்டிருக்க முடியும்.தமிழக கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமக்கு இருக்கிறது என்று கூட அறியாத ஒரு அரசாக தமிழகம் இருப்பது சாபக்கேடு!


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top