பஞ்சாப்பில் 3 நாட்கள் ரயில் மறியல் போராட்டம்: வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு; விவசாயிகள் அமைப்பினர்

மத்திய பாஜக அரசின் வேளாண் மசோதாவை எதிர்த்து பஞ்சாப்பில் விவசாயிகள் அமைப்பினர் 3 நாட்கள் ரயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு

வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பஞ்சாப்பில் விவசாயிகள் அமைப்பினர் 3 நாட்கள் ரயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருப்பதால், உணவு தானியங்கள், உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைப் பல்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்வது பாதிக்கப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள 3 வேளாண் மசோதாக்களுக்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. நாடு முழுவதும் விவசாயிகள், விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இந்த மசோதாவை எதிர்த்து வருகின்றன.

ஆனால், இந்த மசோதாவால் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும், விவசாயிகளின் நலனுக்காகவே இந்த மசோதாக்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்று பாஜக தலைமையிலான மத்திய அரசு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று முதல் முதல் வரும் 26-ம் தேதிவரை ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக பல்வேறு விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

இதுகுறித்து வடக்கு மற்றும் வடக்கு மத்திய ரயில்வே பொதுமேலாளர் ராஜீவ் சவுத் கூறுகையில், “வேளாண் மசோதாவுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் 3 நாட்கள் ரயில் மறியல் போராட்டத்தால் சரக்கு ரயில் போக்குவரத்துச் சேவை வெகுவாகப் பாதிக்கப்படும். அத்தியாவசியப் பொருட்களைப் பல்வேறு மாநிலங்களுக்குக் கொண்டு செல்வதிலும் சிக்கல் ஏற்படும்.

கொரோனா வைரஸிலிருந்து தற்போதுதான் பொருளாதாரம் மெல்ல மீண்டு வருகிறது. இந்த நேரத்தில் நடத்தப்படும் போராட்டம், சரக்குப் போக்குவரத்தைக் கடுமையாகப் பாதிக்கும். அவசர நேரப் பயணத்துக்குச் செல்லும் பயணிகளையும் இந்த ரயில் மறியல் போராட்டம் பாதிக்கும்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 990 ரேக் உணவு தானியங்களை இந்திய உணவுக் கழகத்துக்கு பஞ்சாப் அனுப்பி வைத்துள்ளது. இம்மாதம் 23-ம் தேதி வரை 816 ரேக்குகள் உணவு தானியங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பஞ்சாப்பிலிருந்து நாள்தோறும் 35 ரேக்குகளுக்கு அதிகமாக உணவு தானியங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. தவிர 10 ரேக்குகள் வரை உரம், சிமெண்ட் சிறு வாகனங்கள் மூலமும், இதர பொருட்கள் கண்டெய்னர்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.

அதேபோல, நாள்தோறும் 20 பெட்டிகள் அளவுக்கு நிலக்கரி, உணவு தானியங்கள், வேளாண் சார்ந்த பொருட்கள், எந்திரங்கள், பெட்ரோலியப் பொருட்கள், இறக்குமதி உரங்கள் போன்றவற்றைப் பஞ்சாப் மாநிலம் பெற்று வருகிறது. இவை அனைத்தும் பாதிக்கப்படும். சிறப்புப் பயணிகள் ரயிலும் 3 நாட்களுக்கு இயங்காது “ எனத் தெரிவித்தார்.

இவ்வளவு பாதிக்கப்படும் என்று தெரிந்தும் விவசாயிகளுக்கு எதிராக அவசர, அவசரமாக இந்த கொரோனாவையும் பொருட்படுத்தாமல் இந்த மசோதாவை ஏன் பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது என்று யாரும் கூறுவதில்லை. ஆனால் விவசாயிகள் போராட்டம் செய்தால் மட்டும் மக்கள் பாதிப்பார்கள் என்று கூறுகிறார்கள். என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்   


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top