கூடங்குளம் பொதுமக்கள் மீதான வழக்குகளை ஏன் இன்னும் அதிமுக அரசு திரும்பப் பெறவில்லை?

கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீதுள்ள  வழக்குகளை திரும்பப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க நெல்லை எஸ்.பி.யிடம் மனு

கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காவல் நிலையங்களில் பதிவு செய்துள்ள சில வழக்குகளை திரும்பப் பெறுவதற்கு சுப்ரீம்கோர்ட் தமிழக அரசுக்கு ஏற்கனவே ஆணை பிறபித்து இருக்கிறது,ஆனால் இன்னும் தமிழக அதிமுக அரசு கூடங்குளம் பொதுமக்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறவில்லை இதைத் தொடர்ந்து பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் திருநெல்வேலியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர்  

ராதாபுரம் ஒன்றிய அதிமுக செயலாளர் எம். அந்தோணி அமல்ராஜா அளித்த மனு:

கூடங்குளம் அணுஉலை போராட்ட காலகட்டத்தில் கூடங்குளம், பழவூர், உவரி, ராதாபுரம் காவல் நிலையங்களில் பொதுமக்கள் மீதும், படித்த இளைஞர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் படித்த இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

பொதுமக்களும் பெரும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். எனவே இந்த வழக்குகளை திரும்ப பெறுவதற்கு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்ட காலத்தில் உவரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வலியுறுத்தி உவரி ஊராட்சி முன்னாள் தலைவி பி. தேம்பாவணி அளித்த மனு:

கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுஉலையை எதிர்த்து கடந்த 2012, 2013-ம் ஆண்டுகளில் திருநெல்வேலி மாவட்ட கடற்கரை கிராமங்களிலும், கூடங்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் நடைபெற்ற போராட்டங்களின்போது உவரி காவல் நிலையத்தில் அந்த கிராம மக்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை கருணை அடிப்படையில் ரத்து செய்ய அரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டப்புளி ஊர் நலக்கமிட்டி சார்பில் பங்குத்தந்தை ரஞ்சித்குமார், ஒருங்கிணைப்பாளர்கள் தே. மனோகரன், ஆர்தர் கிளமென்ட் உள்ளிட்டோர் அளித்த மனுவில், அணுஉலைக்கு எதிரான போராட்டங்களால் வழக்குகளை சந்தித்துள்ள இளைஞர்களுக்கு பாஸ்போர்ட் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் பலர் வேலைவாய்ப்புகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர்.

எனவே அணுஉலைக்கு எதிரான போராட்ட வழக்குகளை திரும்ப பெறவேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயாபதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் இ. சுரேஷ்குமார் அளித்த மனுவிலும் வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூடங்குளம் கிராமநல சங்கம் சார்பில் அதன் தலைவர் பி. அரிமுத்தரசு அளித்த மனு:

கூடங்குளம் அணுமின் நிலையம் அமைய இப்பகுதி மக்கள் நிலம் வழங்கியுள்ளனர். உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றுகூறியுள்ள அணுமின் நிலைய நிர்வாகம் தற்போது எங்களுக்கு எந்த சலுகையும் வழங்கவில்லை. வெளிமாநிலங்களில் இருந்து வேலைக்கு வருவோருக்கு கேட் பாஸ் வழங்குகிறார்கள்.

ஆனால் சிறிய போலீஸ் வழக்கு உள்ள கூடங்குளம் பகுதியினருக்கு கூலி வேலை செய்ய காவல்துறை நன்னடத்தை சான்று வழங்கவில்லை. அணுமின் நிலையம் அமைய நிலத்தை வழங்கி, வறுமையில் வாழும் கூடங்குளம் பகுதி மக்களுக்கு கூலி வேலை செய்ய காவல்துறை சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top