ஓய்வு பெற்ற அரசு மருத்துவருக்கு ஹிந்தி தெரியாததால் லோன் தர மறுத்த வங்கி மேனேஜர்!

ஹிந்தி தெரியாததால் ஓய்வு பெற்ற மருத்துவருக்கு கடன் இல்லை என திருப்பி அனுப்பியுள்ளார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் ஒருவர். மேலாளருக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பப்பட்டது

ஹிந்தி தெரியாது என்பதால் ஓய்வு பெற்ற மருத்துவருக்கு கடன் இல்லை என திருப்பி அனுப்பியுள்ளார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் ஒருவர். மேலாளரிடம் மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் அந்த ஓய்வு பெற்ற அரசு மருத்துவர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற தலைமை அரசு மருத்துவர் பாலசுப்பிரமணியன். இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து, பின்னர், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவரது சொந்த ஊர் கங்கைகொண்ட சோழபுரம். இவருக்கு ஜெயங்கொண்டம் உள்ளிட்ட சில பகுதிகளில் சொந்த நிலம், வீடு ஆகியவை உள்ளது. இவர் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வங்கி கணக்கு வைத்து வரவு-செலவு பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனது இடத்தில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்து கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு லோன் கேட்டு சென்றுள்ளார் பாலசுப்பிரமணியன்.

வங்கியில் தற்போது மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர்  மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரிடம் சென்று பாலசுப்பிரமணியன் தனது இடம் சம்பந்தமான ஆவணங்கள், வரவு செலவு கணக்குகள் மற்றும் வருமான வரி செலுத்தும் படிவம் ஆகியவற்றை காண்பித்து கடன் கேட்டு உள்ளார். அப்போது பேசிய வங்கி மேலாளர், “Do u know Hindi” என ஆங்கிலத்தில் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு மருத்துவர் “I don’t know Hindi, but i know Tamil and English” என ஆங்கிலத்தில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மேலாளரோ, “I am from Maharashtra, I know Hindi. Language problem” என தெரிவித்து நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை என்று சொன்னாராம். ஆனால், பாலசுப்பிரமணியன் மீண்டும் தனது ஆவணங்களை ஒவ்வொன்றாக காண்பித்து, தான் உங்கள் கிளையில் தான் கணக்கு வைத்துள்ளேன் என்னிடம் எல்லா ஆவணங்களும் உள்ளது என தெரிவித்த போதும் வங்கி மேலாளர் மீண்டும் மீண்டும் மொழி பற்றியே பேசினாராம்.

கடன் சம்பந்தமாக எந்த ஆவணத்தையும் பார்க்காமல் கடன் கொடுக்க இயலாது என மேலாளர் கறாராக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்தார் பாலசுப்பிரமணியன். மொழி பிரச்சனை காரணமாக கடன் தர மறுத்ததால் மன உளைச்சல் ஏற்பட்டதாக தெரிவித்து வங்கி மேலாளருக்கு மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் பாலசுப்பிரமணியன்.

கங்கை முதல் கடாரம் வரை சென்று போரிட்டு வெற்றி பெற்ற, ராசேந்திர சோழனின், தலைநகராக விளங்கிய கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள ஒரு வங்கி, வட மொழியான ஹிந்தி தெரியாது என்பதால் கடன் கிடையாது என தெரிவித்தது, தனது உணர்வோடு விளையாடி, தன்னை மிகவும் வேதனைப்படுத்தியதாக தெரிவித்து வருத்தப்படுகிறார் பாலசுப்பிரமணியன்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top