கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து தற்காலிகமாக பே டிஎம் செயலி நீக்க காரணம் என்ன?

கொள்கைகள் அடிப்படையில் கூகுள் ப்ளேஸ்டோரிலிருந்து தற்காலிகமாக பே டிஎம் செயலியை கூகுள் நிறுவனம் நிறுத்தியுள்ளது. நீக்கியதற்கான காரணத்தை வெளியிடவில்லை

கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து பே டிஎம் செயலியை நீக்கி கூகுள் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், பே டிஎம் நிறுவனத்தின் மற்ற செயலிகளான பே டிஎம் ஃபார் பிஸ்னஸ், பே டிஎம் மால், பே டிஎம் மணி ஆகிய செயலிகள் தொடர்ந்து கூகுள் ப்ளே ஸ்டோரில் தொடர்கின்றன.

கூகுள் ப்ளேஸ்டோரிலிருந்து தற்காலிகமாக பே டிஎம் செயலியை நீக்கியதற்கான காரணத்தை கூகுள் நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால், ப்ளாக் ஒன்றில் கூகுள் நிறுவனத்தின் கொள்கைகள் குறித்த அறிவி்ப்பு வெளியாகியுள்ளன.

ஆன்ட்ராய்ட் செக்யூரிட்டி மற்றும் பிரைவஸியின் துணைத் தலைவர் சுஸானே ப்ரே எழுதிய அந்த பதிவில் “ விளையாட்டு தொடர்பாக சூதாட்டம் நடத்தும் வசதிகளைக் கொண்ட, ஆன் லைனில் சூதாட்டத்துக்கு உதவும் செயலிகளை நாங்கள் அனுமதிப்பதில்லை.

இதன்படி, ஒரு செயலி, வாடிக்கையாளர்களை பணம் செலுத்தக்கூறி, சூதாட்டத்தில் ஈடுபடுத்தி, அதன் மூலம் பணப்பரிசுகளை வழங்கினால் இது எங்களுடைய கொள்கைகளுக்கு விரோதமானதாகும்.

அவ்வாறு ஏதேனும் செயலிகள் நிறுவனத்தின் கொள்கைகளை மீறி செயல்பட்டால், அந்த செயலி ஒழுங்குமுறைக்கு வரும்வரை நீக்கப்படும். தொடர்ந்து அந்த செயலி இதுபோன்ற விதிமுறை மீறலில் ஈடுபட்டால், கூகுள் நிறுவனம் அந்த செயலியை நிரந்தரமாக நிறுத்திவிடும். எங்களின் கொள்கைகள் அனைத்து டெவலப்பர்கள், செயலிகளுக்கும் பொருந்தும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே பேடிஎம் நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ கூகுள் ப்ளே ஸ்டோரில் தற்காலிகமாக பேடிஎம் செயலி இருக்காது. புதிய பதிவிறக்கம் மற்றும் அப்டேட்களுக்கு பயன்படுதத்த முடியாது.விரைவில் கூகுள் ப்ளேஸ்டோரில் பே டிஎம் வந்துவிடும்” எனத் தெரிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் ஆன்-லைனில் நடக்கும் சூதாட்டம், மற்றும் ஒழுங்கு முறையில்லாத சூதாட்ட செயலிகள் குறிப்பாக ட்ரீம்11 போன்றவற்றை தடை செய்துள்ளது. ஆனால், பே டிஎம் நிறுவனம் தன்னுடைய செயலிக்குள் ஃபேன்டஸி விளையாட்டுகளை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வந்தது.

கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து பே டிஎம் நீக்கப்படுவது இதுதான் முதல் முறையாகும். இந்தியாவில் மட்டும் பே டிஎம் செயலிக்கு 5 கோடி வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top