ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்துக்கும் எதிராக சுதர்ஷன் டிவி ஒளிபரப்பலை நிறுத்தவேண்டும்; உச்ச நீதிமன்றம்

சுதர்ஷன் டிவி விவகாரத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் குறிவைத்து நிகழ்ச்சியை ஒளிபரப்ப ஊடகத்தை அனுமதிக்க முடியுமா?: உச்ச நீதிமன்றம் கேள்வி

ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் இலக்காக வைத்து நிகழ்ச்சியை ஒளிபரப்ப ஊடகத்தை எப்படி அனுமதிக்க முடியும் என்று சுதர்ஷன் தொலைக்காட்சி ஒளிபரப்பும் நிகழ்ச்சி குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சுதர்ஷன் சேனல் சமீபத்தில் ‘பிந்தாஸ் போல்’ எனும் பெயரில் ஒரு நிகழ்ச்சி குறித்த ப்ரமோவை வெளியிட்டது. அதில், மத்திய அரசுப் பணிகளில் சமீபகாலமாக முஸ்லிம்கள் அதிகரித்த சதியை அம்பலப்படுத்தும் நிகழ்ச்சி எனப் பல்வேறு சர்ச்சைக் கருத்துகளுடன் ப்ரமோ வெளியிட்டது.

இந்தக் கருத்துகளுக்கு ஐபிஎஸ் அமைப்புகள், ஓய்வுபெற்ற ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் ஆகியவை கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

இதைத் தொடர்ந்து ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் முன்னாள், இந்நாள் மாணவர்கள் சார்பில் சுதர்ஷன் சேனல் நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கக் கோரியும், முஸ்லிம் மக்களை அவமானப்படுத்தும் நோக்கில் எடுக்கப்படுகிறது என்றும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த ‘பிந்தோஸ் போல்’ நிகழ்ச்சியை மறு உத்தரவு வரும்வரை ஒளிபரப்பத் தடை விதித்து கடந்த 15-ம் தேதி உத்தரவிட்டனர்.

இந்நிலையில், சுதர்ஷன் சேனலின் தலைமை ஆசிரியர் சுரேஷ் சாவ்ஹன்கே சார்பில் அவரின் வழக்கறிஞர் திவான் இன்று பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், “இந்த நிகழ்ச்சிக்கு யுபிஎஸ்சி ஜிகாத் என்று பெயரிட்டதற்குக் காரணம், ஜகாத் அறக்கட்டளை பல்வேறு தரப்பிலிருந்து நிதியுதவியைப் பெற்று வருகிறது. சில தீவிர அமைப்போடு தொடர்புடைய அமைப்புகளிடம் இருந்தும் உதவி பெற்று வருகிறது எனும் அடிப்படையில்தான் அந்தப் பெயர் வைக்கப்பட்டது.

அந்த நிதியில்தான் ஜகாத் அறக்கட்டளை மாணவர்களுக்குப் பயிற்சியும், படிப்பதற்குப் புத்தகங்கள் உள்ளிட்டவற்றையும் வழங்குகிறது. மற்ற வகையில் எந்த சமூகத்தைச் சேர்ந்த தனிநபரும் சிவில் சர்வீஸ் பணியில் தகுதியின் அடிப்படையில் சேர்வதில் சேனலுக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லை.

எங்களின் நிகழ்ச்சியை ஒளிபரப்பி முடிக்க வேண்டும் என விரும்புகிறோம். வேறு எங்கும் நிகழ்ச்சியை ஒளிபரப்ப முடியாது. இதுவரை 4 கட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா, கே.எம்.ஜோஸப் ஆகியோர் அமர்வில் இன்று காணொலியில் விசாரிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி சந்திரசூட் கூறுகையில், “நீங்கள் ஒரு செய்தியைப் புதிதாக வெளிக்கொண்டுவரலாம். ஆனால், அதற்காக ஒரு சமூகத்தையே முத்திரை குத்தி, அவர்களை ஒதுக்கிவைத்து இதுபோன்ற செய்திகளை வெளியிட முடியாது.

இது உண்மையான பிரச்சினை. சிவில் சர்வீஸில் அந்தக் குறிப்பிட்ட பிரிவினர் சேரும்போது, நீங்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பை ஒளிபரப்புகிறீர்கள். அப்படியென்றால், மிக ஆழ்ந்த சதித் திட்டத்துடன்தான் முஸ்லிம்கள் சிவில் சர்வீஸ் பணியில் சேர்கிறார்கள் என்று கூற வருகிறார்களா?

ஒட்டுமொத்த ஒரு சமூகத்தையும் குறி வைத்து ஒரு ஊடகம் நிகழ்ச்சி வெளியிட அனுமதிக்க முடியுமா” எனக் கேள்வி எழுப்பினார்.

நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா, கேஎம் ஜோஸப் கூறுகையில், “குறிப்பிட்ட வெறுப்புணர்வுடன் அனைத்து சிவில் சர்வீஸ் எழுதும் நபர்களையும் மீதும் சாயம் பூசுகிறீர்கள். இது கவலைக்குரிய விஷயம். இங்கு பேச்சு சுதந்திரம் என்பது வெறுப்பைக் காட்டுகிறது.

ஒரு சமூகத்தில் உள்ள ஒவ்வொரு நபரையும் நீங்கள் அடையாளப்படுத்த முடியாது. பிரித்தாளும் திட்டத்தில் அந்தச் சமூகத்தில் உள்ள நல்ல மனிதர்களையும் நீங்கள் ஒதுக்கி வைக்கிறீர்கள்” எனத் தெரிவித்தனர்.

சுதர்ஷன் சேனல் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷியாம் தவனிடம் நீதிபதிகள் கூறுகையில், “தீவிரவாத அமைப்பிடம் பணம் பெற்று சிவில் சர்வீஸ் பயிற்சி தரப்படுகிறதா என்பது குறித்து நீங்கள் புலனாய்வு செய்து செய்தி வெளியிடுவதில் நீதிமன்றத்துக்கு எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால், யுபிஎஸ்சி பணிக்கு முஸ்லிம்கள் குறிப்பிட்ட திட்டத்துடன்தான் சேர்கிறார்கள் என்று அடையாளப்படுத்துவதை அனுமதிக்க முடியாது.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தைக் குறிவைக்க முடியாது எனும் செய்தி ஊடகத்திற்குச் செல்லட்டும். ஒத்திசைவான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட எதிர்கால தேசத்தை நாம் கவனிக்க வேண்டும், இது போன்ற திட்டமிட்ட நிகழ்ச்சியுடன் நாடு இயங்க முடியாது எனும் செய்தி ஊடகங்களுக்குச் செல்லட்டும்.

அவசரக் காலத்தில் நடப்பது குறித்து கண்காணிக்கவே நீதிமன்றமாகிய நாங்கள் இருக்கிறோம். மனிதர்களின் சுயமரியாதையைப் பாதுகாக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை.

அந்த நிகழ்ச்சியில் காட்டும் பச்சை நிற டி ஷர்ட், தலையில் குல்லா வைத்தல் போன்றவை பிறரின் மனதை வேதனைப்படுத்தும். அதேசமயம், நாங்கள் தணிக்கைத் துறையும் இல்லை. இருந்தாலும், அந்த நிகழ்ச்சியில் உள்ள கண்டனத்துக்குரிய காட்சிகள் நீக்கப்பட வேண்டும்” என உத்தரவிட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top