கொடுமணல் அகழாய்வில் 3 முதுமக்கள் தாழிகள்,மனித எழும்புகள் கண்டுபிடிப்பு!

சென்னிமலை அருகே நடந்து வரும் அகழாய்வு பணியில் 3 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் தொழிற்சாலைகள் இருந்ததற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றங்கரையோரம் உள்ள கொடுமணல் கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருந்ததால் பல்வேறு ஆய்வுக்குழுக்கள் மூலம் ஆய்வுகள் நடைபெற்று வந்தது. தற்போது இந்திய தொல்லியல் துறையின் திட்ட இயக்குனர் ஜெ.ரஞ்சித் தலைமையில் கொடுமணல் பகுதியில் கடந்த 4 மாதங்களாக 8-வது அகழாய்வு பணி நடந்து வருகிறது.

இதில், கொடுமணலில் கல்லங்காடு என்ற இடத்தில் சுமார் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதே பகுதியின் அருகில் அணிகலன்கள் தயார் செய்த தொழிற்கூடங்கள் இருந்ததற்கான ஆதாரங்களும் கிடைத்தது.

தற்போது கல்லறைகள் இருந்த பகுதியில் சுமார் 6 அடி ஆழத்தில் 50 மீட்டர் தூரத்துக்கு நீண்ட கால்வாய் போல் தோண்டி ஆய்வு செய்தனர். அதில் பெரிய அளவிலான 3 முதுமக்கள் தாழிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஒரு முதுமக்கள் தாழியில் மண் இருந்தது. அதனை அகற்றிய போது மனித மண்டை ஓடு, துண்டு, துண்டாக கிடந்த கை, கால் எலும்பு மற்றும் முதுகுத்தண்டுவட எலும்பு ஆகியவை இருந்தன. இதில் சிலவற்றை ஆய்வுக்குழுவினர் பத்திரப்படுத்தி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வுக்கூடத்துக்கு எடுத்து சென்றனர்.

இதுகுறித்து அகழாய்வு துறை திட்ட இயக்குனர் ஜெ.ரஞ்சித் கூறுகையில், ‘இதுவரை நடந்த ஆய்வில் தற்போதுதான் தொழிற்கூடங்கள் இருந்ததற்கான முழு அடையாளமாக 3 வரிசைகளாக செங்கற்கள் மூலம் கட்டமைக்கப்பட்ட தொழிற்கூடம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தொழிற்சாலையில் தான் பளிங்கு கற்களால் ஆன அணிகலன்கள் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் இங்கு அதிகமான கல்மணிகளும், தமிழ் பிராமி எழுத்துக்களும் கிடைத்துள்ளன.

இந்த அகழாய்வு பணி வருகிற 30-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது’ என்று தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top