ஆன்லைனில் பாடம் படித்துவந்த சென்னை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர் தற்கொலை

சென்னையை அடுத்த மேடவாக்கம் புஷ்பா நகரைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகன் கார்த்திக், வயது 14. இவர், செம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் எடுத்து வருகின்றனர். மாணவர் கார்த்திக், ஆன்லைனில் நடத்தப்படும் பாடங்களை கவனித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று கார்த்திக்கை ஆன்லைனில் பாடம் படிக்க வைத்துவிட்டு அவரது பெற்றோர், ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டனர். மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, தங்கள் மகன் கார்த்திக் வீட்டின் ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மகனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகு மற்றும் போலீசார் தூக்கில் தொங்கிய மாணவர் கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் கார்த்திக் ஆன்லைன் வகுப்புக்கு பயன்படுத்திய செல்போனையும் போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

மத்திய அரசின் நீட் தேர்வு முறையால் தமிழகத்தின் மாணவர்கள் உயிர் இழந்துவரும் நிலையில், தற்போது பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் படித்துவரும் நிலையில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top