அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம் – நன்றி தெரிவித்த சூரிய

மத்திய அரசின் நீட் தேர்வு அச்சத்தால் ஒரே நாளில் தமிழகத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம் ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையை சட்டமாக கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள்.

நமது பிள்ளைகளின் தகுதியையும், திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக்கூடாது.

மகாபாரத காலத்து துரோணர்கள் ஏகலைவன்களிடம் கட்டை விரலை மட்டுமே காணிக்கையாக கேட்டார்கள். நவீனகால துரோணர்கள் முன்னெச்சரிக்கையுடன் ஆறாம் வகுப்பு குழந்தைகூட தேர்வெழுதி தனது தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். இதையெல்லாம் கடந்து படித்து முன்னேறுகிறவர்களை ’பலியிட ‘ நீட் போன்ற வலிமையான ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள். நீட் தேர்வுக்கு எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம்’என்று குறிப்பிட்டிருந்தார்.

அவருடைய அறிக்கைக்கு தமிழக மக்கள் பெரும் ஆதரவை வெளிப்படுத்தி இருந்தனர். மேலும், தமிழகத்தின் உரிமை மற்றும் நலன் கருதும் அரசியல் காட்சிகள் நடிகர் சூர்யாவிற்கு ஆதரவு அளித்தனர். இந்த அறிக்கை அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் பெருமபாலான கட்சிகள் மத்திய அரசின் நீட் தேர்வுக்கு எதிராகவும் சூர்யாவின் கருத்துக்கு ஆதரவாகவும் இருக்க பா.ஜ.கவைச் சேர்ந்தவர்கள் சூர்யாவை கடுமையாக விமர்சித்தனர்.

இந்தநிலையில், நீட் தேர்வில் தேர்ச்சியடையும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்த சூர்யாவின் ட்விட்டர் பதிவில், ‘அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழக அரசுக்கும், உறுதுணையாய் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்… மாணவர்களுக்கு துணை நிற்போம்… ஒன்றிணைந்து செயல்படுவோம்…’ என்று குறிப்பிட்டுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top