அனுமதிக்கு காத்திருக்கும் நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்கள்;விரைவில் இயக்கப்படும்!

“ரெயில்கள் அனைத்தும் தயார் நிலையில் தான் உள்ளது. அரசு எப்போது அனுமதி வழங்கினாலும் இயக்க தயாராக உள்ளோம்” என்று ரெயில்வே நிர்வாக அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள்

ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு விரைவில் நெல்லை மற்றும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி, மக்கள் தொகை பெருக்கம் கொண்ட மாவட்டங்களில் ஒன்றாக திகழ்வது நெல்லை. இங்கிருந்து வர்த்தக ரீதியாகவும், படிப்பு மற்றும் வேலை சம்பந்தமாகவும் தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள நடுத்தர மக்களின் வசதிக்காக இங்கிருந்து சென்னைக்கு, நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இது தவிர கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் நெல்லை வழியாக சென்னை சென்று வருகிறது. அந்தியோதயா ரெயிலும் நெல்லையில் இருந்து மாலை 5 மணிக்கு தினமும் இயக்கப்பட்டு வந்தது. அதிக வருவாய் கொடுக்கும் வழித்தடங்களாக இவை உள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக இந்த ரெயில்களின் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஊரங்கு தளர்வாக கடந்த 7-ந்தேதி முதல் திருச்சி-நாகர்கோவில் இன்டர்சிட்டி ரெயில் மட்டுமே இயக்கப்பட்டது. கடந்த 9-ந்தேதி முதல் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.

இந்த தினசரி ரெயில் கன்னியாகுமரியில் இருந்து கிளம்புவதால் நெல்லை வருவதற்குள் பெரும்பாலும் நிரம்பிவிடும். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குறைந்த அளவு பயணிகளே பெட்டிகளில் உட்கார அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் 60 சதவீத பயணிகளுடன் தான் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் செல்கிறது.

முன்பதிவு செய்யும் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்று அரசு அறிவித்துள்ளதால் விரைவில் நிரம்பி விடுகிறது. இதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். நெல்லை, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படாததால் விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம், சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்கு நடுத்தர மக்கள் அதிக செலவு செய்து பஸ்சில் பயணம் செய்கின்றனர்.

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மட்டுமே சென்னைக்கு இயக்கப்படுவதால் அதிகளவு பயணிகள் கூட்டம் இருக்கிறது. ஆனால் சமூக இடைவெளியுடன் பயணம் செய்ய வேண்டும் என்பதால் பலருக்கு இடம் கிடைப்பதில்லை. சீக்கிரமாகவே முன்பதிவும் முடிந்து விடுகிறது.

எனவே ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு விரைவில் நெல்லை மற்றும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர். குறிப்பாக நெல்லை எக்ஸ்பிரசை இயக்கினால் இங்கிருந்து சென்னை செல்லும் பயணிகள் எந்தவித சிரமும் இன்றி செல்லலாம் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

தென்காசி மாவட்டத்திலும் இதே நிலைதான் நீடிக்கிறது. செங்கோட்டையில் இருந்து பொதிகை, சிலம்பு உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சென்னைக்கு தினமும் இயக்கப்படுகிறது. பொதிகை எக்ஸ்பிரஸ் செங்கோட்டையில் இருந்து தினமும் மாலை 6.10 மணிக்கு 12661 என்ற எண்ணுடனும் சென்னை நோக்கி செல்லும்.

செங்கோட்டையில் இருந்து தென்காசி, கடையநல்லூர், பாம்புகோவில் சந்தை, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர், மதுரை, திண்டுக்கல் மார்க்கமாக சென்னை சென்றடையும்.

சிலம்பு எக்ஸ்பிரஸ் செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய 3 நாட்களில் மாலை 4.20 மணிக்கு புறப்படும். தென்மாவட்டத்தில் அதிக அளவில் பயணிகள் பயணிக்கும் ரெயிலாகவும், அதிக வசூலை வாரி வழங்குவதாகவும் இருப்பது பொதிகை எக்ஸ்பிரஸ் தான்.

கொரோனா ஊரடங்கு தளர்வாக சிலம்பு எக்ஸ்பிரஸ் மட்டுமே தற்போது இயக்கப்படுகிறது. இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் வாரத்திற்கு 3 நாட்கள் வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் மட்டுமே இயக்கப்படுகிறது. எனவே தினசரி ரெயிலான பொதிகை ரெயிலை மீண்டும் இயக்கி தென்காசி மாவட்ட மக்கள் எளிதாக சென்னை சென்று வர தென்னக ரெயில்வே வழிவகை செய்யவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

இதுகுறித்து ரெயில்வே நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழக அரசு மேற்கண்ட எந்த ரெயில்களையும் இயக்குவது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை. ரெயில்கள் அனைத்தும் தயார் நிலையில் தான் உள்ளது. அரசு எப்போது அனுமதி வழங்கினாலும் இயக்க தயாராக உள்ளோம்’ என்று தெரிவிக்கின்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top