போலீஸ் நிலையத்தில் நாள்தோறும் 5 பேர் வீதம் உயிரிழப்பு! மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!

நாடு முழுவதும் போலீஸ் காவலில் தினசரி 5 பேர் வீதமாக சுமார் 1697 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சகம் அதிர்ச்சி அறிக்கை!

இந்தியாவில் ஒரே ஆண்டில் 112 என்கவுண்டர்கள் நடந்துள்ளன. போலீஸ் காவலில் நாளொன்றுக்கு 5 பேர் வீதம் சுமார் 1697 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதில் தமிழ்நாட்டில் மட்டும் போலீஸ் காவலில் 12 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் எழுப்பும் பல்வேறு கேள்விகளுக்கு சம்மந்தப்பட்ட அமைச்சகங்கள் எழுத்துபூர்வமாக பதிலளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்றைய தினம் இந்தியா முழுவதும் நீதிமன்ற காவலில் உள்ளவர்கள் உயிரிழந்த விகிதம் எவ்வளவு?, மாநிலங்கள் வாரியாக எண்ணிக்கை என்ன? , நாட்டில் உள்ள சிறை கைதிகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு? என பல கேள்விகள் எழுத்துபூர்வமாக கேட்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி விளக்கமளித்திருக்கிறார்.

இந்தியாவில் ஏப்ரல் 1ம் தேதி 2019ம் ஆண்டு முதல் மார்ச் 31ம் தேதி 2020ம் ஆண்டு வரை நாளொன்றுக்கு 5 பேர் வீதம் காவல் நிலையத்தில் நீதிமன்ற காவலில் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், நாடு முழுவதும் மொத்தமாக 1697 பேர் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

இதில் அதிகபட்சமாக உத்திரபிரதேசத்தில் 400 பேர் வரை நீதிமன்ற காவலில் உயிரிழந்திருக்கின்றனர். தொடர்ந்து, தமிழகம் மற்றும் குஜராத் மாநிலங்களை பொறுத்தவரை தலா 12 காவல் துறை கஸ்டடி மரணங்கள் நடந்திருப்பதாகவும், போலீசார் காவலில் எடுக்கப்பட்டவர்களை அடித்து துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 2020 ஜூன் மாதம் 22ம் தேதி தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்திற்குள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் இறந்துள்ளதாக தமிழக காவல் துறை பதிவேட்டில் உள்ளது எனவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் இவ்வழக்கு மத்திய புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள் என்பதையும் உள்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, இந்தியாவில் ஒரே ஆண்டில் 112 என்கவுண்டர்கள் நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 1350 சிறை சாலைகள் உள்ளன. இவற்றில் 4 லட்சத்து 37 ஆயிரத்து 310 கைதிகளை அடக்கும் வகையில் உள்ளன. ஆனால் நடப்பாண்டை பொறுத்தவரையில், சுமார் 4 லட்சத்து 88 ஆயிரத்து 600 கைதிகள் அளவுக்கதிகமாக அடைக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top