சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை வழங்கிய புத்தகத்தில் இந்தி மொழி! மும்மொழிக்கு அடித்தளம்?

இன்று கூடிய தமிழக சட்டப்பேரவையில் உறுப்பினர்களுக்குச் சுகாதாரத்துறை வழங்கிய புத்தகத்தில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தியும் இருந்ததால், இது மும்மொழிக் கொள்கைக்கான முன்னோட்டமா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

சட்டப்பேரவையின் இறுதி நாளான இன்று சட்டப்பேரவைக்கு வந்த உறுப்பினர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் மூலிகைகள் குறித்த ஒரு புத்தகம் வழங்கப்பட்டது. அதில் விளக்கங்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இருந்தன. இதைக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்போது குறிப்பிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

”சுகாதாரத்துறை தொடர்பான புத்தகத்தில் ஏன் தமிழ், ஆங்கில மொழியுடன் இந்தியும் உள்ளது. இது மும்மொழிக்கொள்கைக்கான முன்னோட்டமா?” என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

இதற்கு உடனடியாகப் பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ”இது மூலிகைகளின் சிறப்பம்சத்தைக் குறிப்பிடும் புத்தகம். ஆயுஷ் அமைச்சகம் சார்பில் வழங்கப்பட்ட புத்தகம். அதில் மூலிகைகளின் பெயரைக் குறிக்க இந்தி இடம்பெற்றுள்ளது.

இதைப் பெரிதுபடுத்த வேண்டாம். தேசிய அளவில் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளதால் இந்தி இடம் பெற்றுள்ளது. அரசைப் பொறுத்தவரை இருமொழிக் கொள்கை என முதல்வர் அறிவித்ததையே இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இருமொழிக் கொள்கையில் மாற்றமில்லை” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், ”புதிய கல்விக் கொள்கையில் 3,5,8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வுகள் உள்ளன. இது மாணவர்களைப் பாதிக்கும். குலக்கல்விக்கு இடம் தரும் வகையில் புதிய கல்விக் கொள்கை உள்ளது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இதுகுறித்து விவாதிக்க வேண்டும். சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்டித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top