விழுப்புரத்தில் உழவர் நிதி உதவி திட்ட முறைகேடு; 2 அரசு பெண் அதிகாரிகள் கைது!

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கான -உழவர் நிதி உதவி முறைகேடு தொடர்பாக 2 அரசு பெண் அதிகாரிகளை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 12 ஆயிரம் போலி பயனாளிகள் மூலம் சுமார் 28 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்தது அம்பலமானது. பிரதமரின் விவசாயிகளுக்கான ஊக்க நிதி உதவி திட்டத்தின் கீழ் தமிழகத்தில உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் தலா ரூ. 2 ஆயிரம் வீதம் 3 தவணையாக அவரவர் வங்கி கணக்கில் ரூ.6 ஆயிரம் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது இந்த திட்டத்தில் தமிழகத்தில் ஈரோடு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, திருவாரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் முறைகேடு நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து இதுதொடர்பாக விசாரணை நடத்த அந்தந்த மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு ஒன்றினை அமைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண்துறை இணை இயக்குனர் ராஜ சேகர் தலைமையில் துணை இயக்குனர்கள் செல்லப்பாண்டியன், கண்ணகி, மல்லிகா, பெரியசாமி ஆகியோர் தலைமையிலான குழுவினர் 13 வட்டாரங்களில் 15க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைத்து விசாரணை நடந்து வருகிறது.

ஏற்கனவே விழுப்புரத்தில் 7 ஒப்பந்த பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முறைகேட்டிற்கு துணைபோனதாக, வல்லம் ஊராட்சி ஒன்றிய வேளாண் விரிவாக்க அலுவலகத்தில் பணியாற்றிய ஆயிஷாபி, சாவித்திரி ஆகிய இருவரையும் சி.பி.சி.ஐ.டி.,  போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார் கைது செய்யப்பட்ட இருவரையும் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். போலி பயனாளிடமிருந்து 8 கோடி ரூபாயை மீட்டுள்ள அதிகாரிகள் எஞ்சிய தொகையை மீட்கும் பணி நடந்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில், 550 போலி பயனாளிகள் மூலம் 67 லட்சம் ரூபாய்க்கு மோசடி நடந்திருப்பதாக மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், செங்கல்பட்டு மாவட்டத்தில், 7 ஆயிரம் போலி பயனாளிகள் மூலம் 4 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி அரங்கேறியுள்ளது. இதையடுத்து 7 ஆயிரம் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு முதற்கட்டமாக 70 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உழவர் நிதி உதவி முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது.இந்த  ஊழல் வெளியே தெரிந்ததால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தெரியாத பல ஊழல்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளது என்று மக்கள் கூறுகிறார்கள்   


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top