ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணி வழங்கியதில் தமிழக அரசு பாரபட்சம்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுக்கு பணி வழங்கியதில் தமிழக அரசு பாரபட்சம் காட்டுகிறது இளநிலை உதவியாளர் பணியிடம் வழங்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தினர்.

தூத்துக்குடியில் கடந்த 2018- மே 22-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, பிரபு உள்ளிட்டோருடன் வந்து, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர் அதில் உள்ள விபரம்:

“தூத்துக்குடியில் 2018-ம் ஆண்டு மே 22, 23 தேதிகளில் நடைபெற்ற போலீஸாரின் துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடி சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கும், காயமடைந்தவர்களுக்கும் கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், கல்வித் தகுதியின் அடிப்படையில் வேலை வழங்காமல், அரசின் மிக கடைநிலை பணியாளர்களாக, அரசு ஊழியர்களிலேயே மிகக் குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களாகவே பணி வழங்கியிருப்பது கருணை அடிப்படையிலானது அல்ல, ஏதோ கண் துடைப்புக்காக கொடுக்கப்பட்டதாகவே உணருகிறோம்.

ஆனால், அதற்கு பிறகு தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு துயர நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளநிலை உதவியாளர் பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளன. எங்கள் குடும்ப உறவுகளுக்கு மட்டும் அரசு வேலை வழங்குவதில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது.

எனவே, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுக்கு இளநிலை உதவியாளர் பணியிடம் வழங்க வேண்டும்.

இது தொடர்பாக தூத்துக்குடிக்கு வரவுள்ள தமிழக முதல்வரை நேரில் சந்தித்து எங்களது நியாயமான கோரிக்கையை வலியுறுத்த வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும் என, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top