புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்தது குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை; ராகுல் காந்தி கடும் கண்டனம்

புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்தது குறித்து மத்திய அரசு கணக்கெடுக்கவில்லை என்றால், யாரும் உயிரிழக்கவில்லை என்று அர்த்தமா? ராகுல் காந்தி மத்திய அரசுக்கு கேள்வி

நீங்கள் கணக்கெடுக்கவில்லை என்றால், யாரும் உயிரிழக்கவில்லை என்று அர்த்தமா? என புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு குறித்து ராகுல் காந்தி மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் 5 மாதங்களுக்குப் பிறகு நேற்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. நேற்றையை கூட்டத்தொடரின் போது பேசிய மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார், ஊரடங்கு காலத்தில் மரணமடைந்த புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து மத்திய அரசிடம் எந்த தகவலும் இல்லை என்று கூறினார்.

இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வழக்கம்போல் மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைகளுக்காக வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் ராகுல் காந்தியும் சென்றுள்ளார்.

வெளிநாட்டில் 2 வாரங்கள் தங்கி மருத்துவ பரிசோதனைகளை முடித்து கொண்டு இந்தியாவுக்கு திரும்பிய பின்னர், அவர்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்வார்கள் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவுகள் வெளியிடுவதன் மூலம் மத்திய அரசை விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘‘ஊரடங்கின் போது புலம்பெயர் தொழிலாளர்கள் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்து மோடி தலைமையிலான அரசுக்கு தெரியவில்லை. எத்தனை பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் என்பது தெரியவில்லை.

நீங்கள் கணக்கெடுக்கவில்லை என்றால், யாரும் உயிரிழக்கவில்லை என்று அர்த்தமா? மக்கள் உயிரிழப்பதை நினைத்து அரசுக்கு எந்தக் கவலையும் இல்லை என்பது வருத்தமான ஒன்று. புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பதை உலகம் பார்த்தது. ஆனால் மோடி அரசுக்கு இதுபற்றி தெரியவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top