ரஷியாவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொரோனா தடுப்பூசி வினியோகம் தொடங்கியது – ரஷிய சுகாதார அமைச்சகம்

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை தடுக்க ரஷியாவில் ஸ்புட்னிக்-5 என்ற தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகமும், கமலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையமும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசியை ரஷியா முறைப்படி பதிவு செய்துள்ளது.

இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்கும் 3-வது மற்றும் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையும் தொடங்கி உள்ளது. இந்த சோதனையில் 31 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி போட்டு சோதிக்கப்படவுள்ளது.

இதற்கு மத்தியில், கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் பயன்பாட்டுக்காக இந்த தடுப்பூசியின் வினியோகம் தொடங்கி உள்ளது. இதை ரஷிய சுகாதார அமைச்சகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதையொட்டி ரஷிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “கமலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்ட தடுப்பூசியின் முதல் தொகுதி ரஷிய பிராந்தியங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதல் வினியோகமானது, தடுப்பூசியை பரவலாக்கும். மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு கொரோனா தடுப்பூசி முதலில் போடப்படும்” என கூறப்பட்டுள்ளது.

உலகிலேயே ரஷியாவில்தான் கொரோனா தடுப்பூசி முதன்முதலாக மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top