நீட் தேர்வு தற்கொலைகள்;தமிழக அரசு வரலாற்று துரோகத்தை செய்கிறது; கி.வீரமணி அறிக்கை!

‘நீட்’ காரணமாக மாணவர்கள் தற்கொலை தொடர்கிறது;தமிழக அரசு  மவுனிகளாகவே இருப்பது வரலாற்று துரோகம் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிஅறிக்கை

‘நீட்’ காரணமாக மாணவர்கள் தற்கொலை தொடர்கிறது, ‘நீட்’ எனும் கொலைப் பாதகத்தினை ஒழிக்கும்வரை நமது போராட்டங்கள் தொடரும், மாணவர்களே, எந்தப் பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வல்ல என்பதை உணருங்கள் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

கி.வீரமணி இன்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

“‘நீட்’ தேர்வின் காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அரியலூரில் ஓர் இழப்பைச் சந்தித்த ஈரமும் இன்னும் காயாத நிலையில், இன்று மதுரையிலிருந்து மற்றொரு சோகச் செய்தி வந்து நம்மைத் தாக்குகிறது.

நாளை நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் மதுரை ரிசர்வ் லைன் பகுதியைச் சார்ந்த மாணவி துர்கா ஜோதி தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். அவர் எழுதி வைத்திருக்கும் கடிதம் நெஞ்சைப் பிளப்பதாக இருக்கிறது.

நாடெங்கும் இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளன என்பது அரசுக்கோ, உச்சநீதிமன்றத்துக்கோ தெரியவில்லையா?

தேர்வு முடிவுகள் வந்த பின்பு நடக்கும் ஒரு சில தற்கொலைகளைத் தடுக்க மாணவர்களை நாம் தயார் செய்கிறோம் – உளவியல் ரீதியில் அவர்களை அணுக முயற்சிக்கிறோம் என்பது ஒருபுறம் என்றால், நன்கு படிக்கக் கூடிய மாணவர்கள், பெரும் கனவைச் சுமந்திருக்கும் மாணவர்கள் மீது இந்த ஒற்றை ‘நீட்’ தேர்வு தரும் அழுத்தம் எவ்வளவு கொடுமையாக இருக்கிறது என்பதற்குத் தொடர்ந்து நடக்கும் தற்கொலைகளே சான்றாகும்.

நாடெங்கும் நடக்கும் இத்தகைய தற்கொலைகளுக்கு மூலகாரணம் ‘நீட்’ தேர்வுத் திணிப்பு தானே! மத்திய அரசின் இந்த அரசமைப்புச் சட்ட விரோத நீட் தேர்வு எத்தனை காலத்துக்கு இப்படி மாணவர்களைப் பழி வாங்கப் போகிறது?

அரியலூர் அனிதா தொடங்கி, செஞ்சி பெரவள்ளூர் பிரதீபா, திருச்சி சுபசிறீ, திருப்பூர் ரிதுசிறீ, பட்டுக்கோட்டை வைஷ்யா, விழுப்புரம் மோனிஷா, இந்த ஆண்டிலேயே கோவை சுபசிறீ,

பட்டுக்கோட்டை ஹரிஷ்மா, இரு நாள்களுக்கு முன் அரியலூர் விக்னேஷ், இப்போது மதுரை ஜோதி துர்கா, நாடெங்கும் இன்னும் பல மாணவர்கள், தேர்வெழுதச் சென்ற இடத்தில் மரணமுற்ற பெற்றோர்கள் என தமிழ்நாட்டில் மட்டும் ‘நீட்’ தேர்வால் பலியானோரின் எண்ணிக்கையே 20-அய் தொடும் அளவிற்கு கொடுமையாக உயர்ந்திருக்கிறதே.

இன்னும் இந்திய அளவில் எத்தனை மாணவச் செல்வங்கள் இந்தக் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைச் செய்திகள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கின்றனவே. இவை எதையும் கணக்கில் கொள்ளாமல், ‘நீட்’ தேர்வின் மூலம் எளிய மக்களின் மருத்துவக் கனவைத் தகர்ப்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்படுவதை எப்படித் தொடர்ந்து அனுமதிப்பது?

தமிழக அரசும், ‘இது யாருக்கோ வந்த விருந்து’ என்னும் போக்கில் கண்டுகொள்ளாமலே இருப்பதும், மத்திய அரசிடம் தங்கள் உரிமைக் குரலை எழுப்பாமல் மவுனிகளாகவே இருப்பதும், வரலாற்றின் பக்கங்களில் துரோகப் பட்டியலில் தான் இடம்பிடிக்கும் – கிடைக்கும் என்பதை உணரட்டும்.

“எத்தகைய சோதனைகளையும் நாம் எதிர்கொள்ளலாம்… நம் வெற்றியும் தள்ளிப் போகலாம்… ஆனால், நமது சமூகநீதி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது” என்பதை மாணவர்கள் உணர்ந்து தெளியும் வண்ணம் பெற்றோர் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டிட வேண்டுகிறோம்.

மாணவர்களே, உங்கள் உயிர் விலை மதிப்பற்றதாகும். அநீதிகளுக்கு எதிராக நாம் போராட வேண்டுமே ஒழிய, நம் உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடாது. நாம் தற்கொலைகளை நோக்கிச் செல்லக் கூடாது என்ற உறுதியேற்க வேண்டுகிறோம்.

‘நீட்’டை ஒழிக்கும் போராட்டக் களத்தில் இயக்கங்கள், கட்சிகள், பெற்றோர், மாணவர் மட்டுமல்லாமல் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம். ‘நீட்’டை ஒழிக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்.

மறைந்த துர்கா ஜோதியின் குடும்பத்தினருக்கு நம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்”.என்று அறிக்கையில் கி.வீரமணி தெரிவித்துள்ளார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top