தாய்லாந்து நாட்டில் இரவு நேர ஊரடங்கு சட்டம் அமல்!

659b5371-2ae4-43dc-9be9-5634928d501c_S_secvpfஆசிய நாடான தாய்லாந்தில் பிரதமராக இருந்து வந்த தக்ஷின் ஷினவத்ரா, கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 19-ந் தேதி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். அங்கு அவரது சகோதரி யிங் லக் ஷினவத்ரா இடைக்கால பிரதமராக இருந்து வந்தார்.

அவர் தனது சகோதரரின் பினாமியாக செயல்படுவதாகக்கூறி அவரை ஆட்சியில் இருந்து அகற்றக்கோரி கடந்த நவம்பர் மாதம் முதல் கிளர்ச்சி நடைபெற்று வந்தது. பதவி விலகாமல் அடம்பிடித்து வந்த அவர் பாராளுமன்றத்தை கலைத்தார். அது முதல் அங்கு அரசியல் நெருக்கடி நிலவி வந்தது.

இதற்கு மத்தியில், யிங்லக் ஷினவத்ரா தனது பதவியை தவறாகப்பயன்படுத்தி, தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் தாவில் பிளையன்ஸ்ரீயை பணிநீக்கம் செய்ததாக தாய்லாந்து அரசியல் சாசன கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, பதவி பறிக்கப்பட்டது. இருப்பினும் அவரது பியு தாய் கட்சியை சேர்ந்த நிவாட்டும்ராங் இடைக்கால பிரதமர் ஆனார்.

ஆனால், இடைக்கால அரசுக்கு எதிராகவும், ஆதரவாகவும் தொடர்ந்து போராட்டம் நடந்து வந்தது. நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்தது. ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் இணக்கமாகப் போவதற்கு வழி இல்லை.

இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி அங்கு அதிரடியாக ராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் ராணுவ புரட்சி நடைபெறவில்லை, மக்கள் பீதி அடையத்தேவை இல்லை என கூறப்பட்டது. டி.வி., ரேடியோ நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

அரசியல் கட்சிகள் இடையே ஒற்றுமை ஏற்படுத்த ராணுவம் எடுத்த நடவடிக்கை பயன் அளிக்கவில்லை. நேற்று பாங்காக்கில் ராணுவ வளாகம் ஒன்றில் தாய்லாந்து அரசியல் தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது.

இதற்கிடையே அதிரடியாக ராணுவப்புரட்சி நடைபெற்று, ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றி உள்ளதாக அறிவித்தது. உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 4.30 மணிக்கு ஆட்சி, அதிகாரம் ராணுவத்தின் வசம் வந்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை ராணுவ தளபதி பிரயுத் சான் ஓச்சா வெளியிட்டார். அதில் அவர் மக்கள் அமைதி காக்க வேண்டும், வழக்கம்போல அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என கூறி உள்ளார்.

ராணுவ ஆட்சி அமலுக்கு வந்துள்ள நிலையில் நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் பேச்சு நடத்தி வந்த ராணுவ கட்டிடத்துக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top