ஆக்ஸ்ஃபோர்டின் கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனை இந்தியாவில் நிறுத்தம்

பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் அதன் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்ட ஒருவருக்கு அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதே இதற்கு காரணம் என்றும் அந்த தடுப்பூசி மருந்து “விவரிக்க முடியாத அளவிற்கான உடல்நலக்குறைவு” ஏற்பட்டதால் பரிசோதனை நிறுத்திவைக்கப்பட்டதாக ஆஸ்ட்ராசெனகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பரிசோதனை நடைமுறைகளை மேற்கொள்ளும் புணேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் ஒரு அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது.

“நாங்கள் தற்போதைய சூழலை ஆராய்ந்து வருகிறோம். அஸ்ட்ராசெனிகா நிறுவனம் தனது பரிசோதனையை மீண்டும் தொடங்கும் வரை இந்தியாவில் தடுப்பு மருந்து பரிசோதனை நிறுத்தி வைக்கப்படுகிறது. நாங்கள் இந்தியாவின் மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளர் தலைமையக உத்தரவை பின்பற்றுகிறோம். இது குறித்து மேற்கொண்டு எதுவும் கருத்து கூற இயலாது. மேலும் தகவலுக்கு இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளர் தலைமையகத்தை தொடர்பு கொள்ளலாம்,” என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி, தடுப்பூசி பரிசோதனையின் இரண்டாம் கட்ட முயற்சிகள் தொடங்கின. அதில், 100 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை உட்பட 17 மையங்களில் இந்தியா முழுவதும் 1600 பேருக்கு இந்த தடுப்பூசியை செலுத்தி சோதனை நடத்த திட்டமிடப்படிருந்தது. இந்தநிலையில், இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு, இந்தியாவில் கோவிஷீல்டு சோதனை நடத்துவதை நிறுத்தவேண்டும் என்று இந்த மருந்தை இந்தியாவில் தயாரிக்கும் செரம் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top