ஆக்ஸ்ஃபோர்டு – ஆஸ்ட்ராசெனிகா கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம்!

பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்ட ஒருவருக்கு அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதே இதற்கு காரணம்.

“விவரிக்க முடியாத அளவிற்கான உடல்நலக்குறைவு” ஏற்பட்டதால் பரிசோதனை நிறுத்திவைக்கப்பட்டதாக ஆஸ்ட்ராசெனகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஆகஸ்ஃபோர்டு ஆய்வுக்குழுவுடன் சேர்ந்து இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை தயாரிப்புக்கு ஒப்பந்தம் செய்துள்ள சீரம் இன்ஸ்டிட்யூட், அஸ்ட்ராசெனிகா பரிசோதனை நடவடிக்கையை நிறுத்தியதாக வெளியாகும் தகவல் பற்றி கருத்து கூற முடியாது என்றும், அந்த நிறுவனம் பரிசோதனையை மறுஆய்வுக்காகவே அவ்வாறு செய்திருக்க வேண்டும் என்றும் விரைவில் பரிசோதனை மீண்டும் தொடங்கும் என்றும் கூறியுள்ளது.

இந்தியாவை பொருத்தவரை, எந்த பிரச்சனையும் எதிர்கொள்ளவில்லை என்பதால், தொடர்ந்து இந்தியாவில் பரிசோதனை தொடரும் என்றும் சீரம் இன்ஸ்டிட்யூட் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி பரிசோதனை முன்னேற்றங்களை உலகம் கூர்ந்து கவனித்துவரும் நிலையில், ஆஸ்ட்ராசெனிகா மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்த இந்த தடுப்பூசி மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், சந்தைக்கு வரக்கூடிய முதல் கொரோனா தடுப்பூசி இதுவாக இருக்கலாம் என கருதப்பட்டது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு மூன்றாம் கட்ட பரிசோதனை தொடங்கப்பட்டதில், அமெரிக்காவில் சுமார் 30,000 பேர், அதோடு பிரிட்டன், பிரேசில், மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்தும் மக்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.

தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை என்பது பொதுவாக பல ஆண்டு காலம் ஆயிரக்கணக்கான பேர் மீது செய்யப்படும்.

சர்வதேச அளவில் இந்த தடுப்பூசி பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை மீண்டும் தொடங்கலாமா வேண்டாமா என்பது குறித்து முடிவெடுப்பதற்கு முன்னால், தனிப்பட்ட விசாரணை மூலம் இது தொடர்பான பாதுகாப்பு தரவுகள் ஆய்வு செய்யப்படும் என்கிறார் பிபிசியின் மருத்துவ ஆசிரியர் பெர்குஸ் வால்ஷ்.

“பெரிய அளவில் பரிசோதனை நடத்தப்படும்போது, தற்செயலாக இவ்வாறு உடல்நலக்குறைவு ஏற்படலாம். ஆனால், அதனை கவனமாக தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்ய வேண்டும்” என்று ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்படுவது இது இரண்டாவது முறை என்று பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top