ஹிந்தி_தெரியாது_போடா… இந்தி திணிப்புக்கு எதிராக டிரெண்டான ஹேஷ்டேக்!

இந்தி தெரியாததால் இயக்குனர் வெற்றிமாறன் அவமதிக்கப்பட்டதை கண்டிக்கும் வகையிலும், இந்தி திணிப்புக்கு எதிராகவும் உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக் இன்று தேசிய அளவில் டிரெண்டானது.

இந்தி தெரியாததால் டெல்லி விமான நிலையத்தில் அவமானப் படுத்தப்பட்டதாக இயக்குனர் வெற்றிமாறன் பேட்டி ஒன்றில் தெரிவித்தது தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.

கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கனடா மான்ட்ரியல் திரைப்பட விழாவில் ஆடுகளம் படத்தை ஸ்கிரீன் செய்துவிட்டு இந்தியாவுக்கு திரும்பி வந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகவும் அவர் கூறியிருந்தார். 

இந்தி தெரியாத காரணத்தால் விமான நிலையத்தில் வெற்றிமாறன் அவமதிக்கப்பட்டது குறித்து அறிந்த ரசிகர்கள் அதிருப்தியும், கோபமும் அடைந்துள்ளனர். இந்தி எப்படி இந்த நாட்டின் தாய் மொழியாகும் என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். அத்துடன் #ஹிந்தி_தெரியாது_போடா என்ற ஹேஷ்டேக்கை இன்று காலை முதலே டிரெண்டாக்கி வருகின்றனர். 

இந்திய அளவில் டிரெண்டாகி வரும் இந்த ஹேஷ்டேக்கில், பலரும் தங்கள் கருத்தையும், விமர்சனங்களையும் முன்வைத்த வண்ணம் உள்ளனர். மீம்ஸ்களையும், தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்துவருகின்றனர். 

திரை உலகில் பலர் இந்திக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் சாந்தனு ஆகியோர் இந்த டிரெண்டில் இறங்கி உள்ளனர். 

யுவன் சங்கர் ராஜா, டி- சர்ட் ஒன்றை அணிந்துள்ளார். அதில் திருவள்ளுவர் படத்துடன், நான் தமிழ் பேசும் இந்தியன் என்று அச்சிடப்பட்டிருந்தது. யுவனுடன் நடிகர் ஸ்ரீரீஷ் இருக்கிறார். இவர் சிவப்பு நிற டீ சர்ட் அணிந்துள்ளார். இதில் இந்தி தெரியாது போடா என்று எழுதப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து நடிகர் சாந்தனுவும் அவரின் மனைவியும் இதே ஜோடி டி- சர்ட்களை அணிந்து புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹிந்தி_தெரியாது_போடா என்ற ஹேஸ்டேக்கை தேசிய அளவில் நெட்டிசன்கள் டிரெண்டிங் ஆக்கி வரும் நிலையில், இதற்கு பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

பாரதிய ஜனதா கட்சியியின் தேசியத் தலைவர் எச் ராஜா இந்தியை எதிர்ப்பவர்கள், இந்தி தெரியாதவர்கள் நல்ல தாய்க்கும் தகப்பனுக்கும் பிறக்கவில்லை என்று பேசியிருப்பதாக சமூக வலைத் தளத்தில் செய்திகள் வருகிறது. அப்படி பேசியிருந்தால் அவர் மீது அவமதிப்பு வழக்கு போடலாம் என்றும் ஒரு தரப்பினர் கூறிவருகிறார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top