ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!

உற்பத்தி விலைக்கே டீசல் வழங்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் இன்று முதல் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேசுவரத்தில் இருந்து சுமார் 820 விசைப்படகுகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக இவர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு போதிய விலை இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும் டீசல் விலை உயர்வால் மீன்பிடி தொழில் சார்ந்த பொருட்களின் விலையும் உயர்ந்து இருப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவித்து வந்தனர்.

இந்த சூழலில் ராமேசுவரம் துறைமுகத்தில் மீனவர் சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்தில் டீசலை உற்பத்தி விலைக்கே மத்திய-மாநில அரசுகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மீன்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டது.

மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி விசைப்படகு மீனவர்கள் இன்று காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.

இதனால் விசைப்படகுகள் துறைமுகப் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டன. போராட்டம் குறித்து மீனவர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், கடந்த சில நாட்களாக மீன்களுக்கு சரியான விலை இல்லை. இதனால் எங்களுக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. மேலும் டீசல் விலையேற்றம் காரணமாகவும் அவதிப்பட்டோம். எனவே தான் போராட்டத்தில் இறங்கி உள்ளோம் என்றனர்.

மீனவர்கள் போராட்டம் தொடர்ந்தால் மீன் விலை உயர வாய்ப்புகள் உள்ளன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top