பூந்தமல்லியில் கூவம் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் அமைக்கும் திட்டம்: முதல்வர் அறிவிப்பு

கூவம் கால்வாய்பூந்தமல்லி அருகே சோரஞ்சேரி கிராமதில் உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே,ஆற்றின் இரு கரைகளையும் இணைக்கும் வகையில் புதிய பாலம் ஒன்றை அமைக்க
1கோடியே 20லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:–

கூவம் ஆறு, கேசவபுரம் அணைக்கட்டில் ஆரம்பித்து 65 கிமீ பயணித்து கடலில் கலக்கிறது. இந்த ஆற்றின் வலது கரையோரம் திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி வட்டத்தில் சோரஞ்சேரி கிராமம் அமைந்துள்ளது. இந்த ஆற்றில் மழை வெள்ளப்பெருக்கு காலங்களில் அதிக அளவில் தண்ணீர் செல்லும்.

இதனால் இப்பகுதிகளில் வாழும் மக்கள் அருகிலுள்ள கிராமங்களுக்கு செல்வதற்கும், குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்வதற்கும், விவசாயிகள் தங்களது பொருட்களை வெளியூர்களுக்கு கொண்டு செல்வதற்கும் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

இதனால் கூவம் ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் அமைக்க வேண்டும் என்று சோரஞ்சேரி கிராம மக்களிடமிருந்து கோரிக்கை வரப்பெற்றது. இதனை பரிசீலித்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா சோரஞ்சேரி கிராம மக்கள் பயன் பெறும் வகையில், கூவம் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுவதற்கு உத்தரவிட்டுள்ளார்.

இப்பாலம் அமைப்பதற்காக 1 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கியும் முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம், கூவம் ஆற்றின் இருகரைகளும் இணைக்கப் பெற்று மக்கள் எளிதில் ஆற்றை கடந்து செல்வதற்கு வழிவகை ஏற்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top