மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிறுத்தம்; நிதியமைச்சர் அதிரடி

கொரோனா பாதிப்பு ,நிதிப் பற்றாக்குறை காரணமாக மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி வருவாய் இழப்பீடு இந்த ஆண்டு வழங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது  

மத்திய, மாநில அரசுகளின் ஜிஎஸ்டி வருவாய் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் நிதிப் பற்றாக்குறை காரணமாக மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி வருவாய் இழப்பீடு விவகாரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு புதிதாக இரண்டு தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இரண்டில் ஒன்றை முடிவெடுக்க மாநிலங்களுக்கு 7 நாட்கள் அவகாசம் அளிக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

ஜிஎஸ்டி சட்டத்தின்படி மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புக்கான ஈட்டுத் தொகையை மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு வழங்க வேண்டும் என்று உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஜூலை 2017 முதல் 2022 வரை மாநிலங்களுக்கு மத்திய அரசால் இந்த இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக மத்திய, மாநில அரசுகளின் ஜிஎஸ்டி வருவாய் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான நிலையால் மத்திய அரசால் மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வருவாய் இழப்பீடு வழங்குவது குறித்து முடிவெடுக்க 41-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. காணொலி காட்சி மூலம் நடந்த இந்தக் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநிலங்களின் ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

தற்போதைய ஜிஎஸ்டி வருவாய் நிலவரங்களை வருவாய்த் துறை செயலர் அஜய் பூஷன் பாண்டே கூறியுள்ளார். இந்த ஆண்டின் மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி வருவாய் இழப்பீடு கணிப்பு ரூ.3 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், செஸ் வருவாய் ரூ.65 ஆயிரம் கோடியாக மட்டுமே இருக்கும் நிலையில் ரூ.2.35 லட்சம் கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதில் 97 ஆயிரம் கோடி மட்டுமே ஜிஎஸ்டி அமல்படுத்தலால் ஏற்பட்டுள்ள இழப்பாகும். மீதமுள்ள இழப்பு கொரோனா பாதிப்பால் ஏற்பட்டது. தற்போது ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்துக்கு ரூ.1.5 லட்சம் கோடி இழப்பீடு வழங்கப்பட வேண்டும். ஆனால், இந்தக் காலத்தில் ஜிஎஸ்டி வருவாய் என்பது முற்றிலும் ஒன்றுமில்லாமல் இருக்கிறது.

மாநிலங்களுக்கான இழப்பீடு வழங்குவதில் நிதிப் பற்றாக்குறை இருப்பதால் வேறு இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஒன்று ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன் பெறுவது. இரண்டாவது சந்தையில் இருந்து கடன் வாங்குவது. ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன் பெற்றால் அதற்கான வட்டியில் 0.5 சதவீதம் தளர்வு தரப்படும். மாநிலங்கள் தங்களுக்கான தேர்வை முடிவு செய்ய 7 வேலை நாட்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

தற்போது வழங்கப்பட்டுள்ள இரண்டு வாய்ப்புகளும் இந்த ஆண்டுக் கானது மட்டுமே. அடுத்த ஆண்டு இந்த முடிவு மீண்டும் பரிசீலனை செய்யப் படும். விரைவில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் திட்டமிடப்படும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

2019-20 நிதி ஆண்டில் மாநிலங் களுக்கு வழங்கப்பட்ட ஜிஎஸ்டி வருவாய் இழப்பீடு ரூ.1.65 லட்சம் கோடியாகும். இந்த ஆண்டில் செஸ் வரி வருவாய் ரூ.95,444 கோடியாக இருந்தது என்று நிதித் துறை செயலர் அனுராக் தாக்குர் கூறினார்.

தமிழகத்துக்கு வரவேண்டிய இழப்பீடு ரூ.12,258 கோடி

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி பங்கேற்றார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஆண்டுக்கு ரூ.36 ஆயிரம் கோடி தமிழகத்துக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். 2018-19-ல் ரூ.553.01 கோடி, 2019-20-ல் ரூ.246.56 கோடி, 2020-21-ல் ரூ.11,459.37 கோடி என மொத்தம் ரூ.12,258 கோடியே 94 லட்சம் இழப்பீடாக வரவேண்டி உள்ளது. கடந்த 2017-18 ஆண்டு நிலுவையாக ரூ.4,073 கோடி வரவேண்டி உள்ளது.

மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்காக மத்திய அரசுதான், மேல்வரி தொகுப்பு நிதியை பெருக்குவதற்கான பிற வருவாய் ஆதாரங்களை கண்டறிய வேண்டும்.

தேவை என்றால் ஜிஎஸ்டி இழப்பீடு மேல்வரி விதிப்பதற்கான கெடுவை 5 ஆண்டுகளுக்குமேல் நீட்டிக்க மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும்.

மேலும், மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதற்கு ஜிஎஸ்டி மேல்வரி தொகுப்பு நிதிக்கு மத்திய அரசு கடன் அல்லது முன்பணம் வழங்க வேண்டும். ஜிஎஸ்டி கவுன்சில் இந்த பரிந்துரையை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

கொரோனா பரவல் காரணமாக மாநிலங்களின் நிதிச்சுமை தற்போது பெருமளவில் அதிகரித்துள்ளது. மாநிலத்தின் நிதி ஆதாரங்களை விட்டுக்கொடுத்தால் ஏழை மக்களுக்கான நலத்திட்டங்கள் பாதிக்கப்படும். எனவே ஜிஎஸ்டி இழப்பீட்டை விரைவில் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top