கேரளாவில் மார்க்சிஸ்ட் அரசுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் படுதோல்வி

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலானஅரசுக்கு எதிராக, காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் அரசுக்கு எதிராக, சட்டமன்றத்தில் காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.

காங்கிரஸ் எம்எல்ஏ சதீஸன், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு எதிராக, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தாக்கல் செய்து பேசினார்.

அதைத் தொடர்ந்து ஆளும் கட்சி சார்பிலும் எதிர்க்கட்சித் தரப்பிலும் பல எம்எல்ஏக்கள் பேசினர். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது ஏறக்குறைய 9 மணி நேரம் விவாதம் நடந்தது.

தங்கக் கடத்தல் தொடங்கி பல்வேறு புகார்கள் மற்றும் முறைகேடுகளை குற்றஞ்சாட்டி இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. விவாதங்களுக்கு பினராயி விஜயன் பதிலளித்த போது, எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

தீர்மானத்தின் மீதான வாக்களிப்பில், அரசுக்கு ஆதரவாக 87 பேரும், எதிராக 40 பேரும் வாக்களித்தனர். பெரும்பான்மைக்கு தேவையானதைவிட அதிக இடங்கள் கிடைத்ததால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்தது. நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

பினராயி விஜயன் பதிலளித்த போது  ”காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சிக் குழுப்பம் உச்சத்தில் இருக்கிறது. மூத்த தலைவர்கள் ஒருவொருக்கொருவர் பாஜக ஏஜெண்ட் என்று விமர்சித்துக் கொள்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சிக்குள் தலைமைப் பதவிப் பிரச்சினை தீவிரமாக இருக்கிறது. ஒரு தரப்பினர் ஒட்டுமொத்த முழுத்தலைமையைக் கேட்கிறார்கள், மற்றொரு தரப்பினர் காந்தி குடும்பத்தார் தலைமை ஏற்க வேண்டும் என்று கோருகிறார்கள்.

கேரளாவில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை காங்கிரஸ் தாக்கல் செய்கிறது. டெல்லி காங்கிரஸில் மற்றொரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் நடக்கிறது.

மூத்த தலைவர் கபில் சிபல் வெளிப்படையாகவே நான் பாஜக சார்பானவர் இல்லை எனத் தெரிவித்தார். பின்னர் தனது கருத்துகளை வாபஸ் பெற்றார்.

கடந்த 1980-களில் கேரள மாநிலத்தில் ஆண்ட காங்கிரஸ் கட்சி, இனிமேல் கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வர முடியாது என்று சவால் விட்டது. ஆனால், அதன்பின் 4 முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது.

சொந்தமாக ஒரு தலைவரைக் கூட காங்கிரஸ் கட்சியால் தேர்வு செய்ய முடியாத நிலையில்தான் கட்சி இருக்கிறது. கட்சியில் தலைமைப் பதவியில் மாற்றம் தேவை என மூத்த தலைவர்கள் கடிதம் எழுதும் நிலைதான் இருக்கிறது. இந்தக் கடிதத்தால் சோனியா காந்தியும் பதவியை ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டுவிட்டார்.

ராகுல் காந்தி ஏற்கெனவே தலைவர் பதவியிலிருந்து விலகி, ஏற்க முடியாது எனத் தெரிவித்துவிட்டார். காங்கிரஸ் கட்சியில் அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து ஒருநிலைப்பாட்டில் ஒரு தீர்மானம் எடுத்திருக்கிறார்களா, அவ்வாறு நடந்துள்ளதா?

அயோத்தி விவகாரத்தில்கூட காங்கிரஸ் கட்சியில் ஒருதரப்பினர் எதிர்க்கின்றனர், மற்றொரு தரப்பினர் ஆதரிக்கின்றனர். இரட்டை நிலைப்பாட்டுடன் காங்கிரஸ் கட்சி இருக்கிறது.

காங்கிரஸ் கட்சி மிகவும் பரிதாபகரமான நிலையில் இருக்கிறது. இந்தச் சூழலில் எங்கள் அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியில் உள்ள பல்வேறு தலைவர்கள் பாஜகவின் அழைப்புக்காகக் காத்திருக்கிறார்கள். பாஜக அழைத்தால், எப்போது வேண்டுமானாலும் அங்கு போய்ச் சேர்ந்துவிடுவார்கள். தொலைபேசி அழைப்புக்காகவே காத்திருக்கிறார்கள்.

மத்தியில் பல்வேறு மதச்சார்பற்ற அரசுகளை வீழ்த்த பாஜகவுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி செயல்பட்டுள்ளது. மதச்சார்பின்மை மீதான உங்கள் சித்தாந்தத்தையும் அடையாளத்தை விட்டுவிட்டு பாஜகவின் பி டீம் போல செயல்படுகிறீர்கள். கேரளாவில் அதேபோல நடக்கிறது.

காங்கிரஸ், முஸ்லிம் லீக், பாஜக இடையே ரகசியமான உறவு இருக்கிறது. கம்யூனிஸ்ட்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பவர்கள் சேர்ந்து ஒருதரப்பான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்கள். அரசுக்கு எதிராக எந்தவிதமான குற்றச்சாட்டையும் சுமத்த முடியாததால், நற்பெயரைக் கெடுக்கும் நோக்கில் மாயத் தோற்றத்தை உருவாக்குகிறார்கள்”.  இவ்வாறு பினராயி விஜயன் பேசினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top