ராஜஸ்தான்: நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் அரசு வெற்றி! பா.ஜ.க.வின் சதி திட்டம் தோல்வி!

ராஜஸ்தான் சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.இதனால் பாஜகவின் சதி திட்டம் தோல்வியடைந்தது  

ராஜஸ்தானில் முதல்-மந்தரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. துணை முதல்-மந்திரியாக இருந்த சச்சின் பைலட்டுக்கும், அசோக் கெலாட்டுக்கும் இடையே ஏற்பட்டிருந்த தலைமுறை இடைவெளி அதிகார மோதலாக  எதிரொலித்தது.

இந்த மோதலை மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆட்சியை கைப்பற்ற கிடைத்த சந்தர்ப்பமாக பார்த்து அரசியல் காய்களை நகர்த்தியது.

சச்சின் பைலட்டின் துணை முதல்-மந்திரி பதவி கடந்த ஜூலை மாதம் 14-ந்தேதி பறிக்கப்பட்டது. அவரது ஆதரவாளர்கள் 2 பேரின் மந்திரி பதவியும் பறிக்கப்பட்டது. மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டார். சச்சின் பைலட்டுக்கு ஆதரவான 18 எம்.எல்.ஏ.க்கள் வெளிமாநிலத்தில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்கியிருந்தனர்.

ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் பைலட் செயல்படுகிறார் என்றும், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க போகிறார் என்றும் யூகங்கள் கிளம்பின. ஆனால் இதற்கு பைலட் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வந்த சர்ச்சையில் கடந்த சில தினங்களுக்கு முன் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

சச்சின் பைலட், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் சமரசம் ஏற்பட்டது. இந்த நிலையில், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் நேற்று மாலை 5 மணிக்கு முதல் மந்திரி அசோக் கெலாட்டின் இல்லத்தில் அவரது தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி சச்சின் பைலட்டுக்கு அழைப்பு விடப்பட்டது.

இதனையேற்று சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கெலாட்டின் வீட்டிற்கு சென்றனர். சச்சின் பைலட்டை அசோக் கெலாட் இன்முகத்துடன் வரவேற்றார். இருவரும் கைகுலுக்கி கொண்டனர்.  இதன்பின்னர் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த சூழலில், எம்.எல்.ஏ.க்கள் பன்வார் லால் சர்மா மற்றும் விஷ்வேந்திர சிங் ஆகிய இருவரையும் சஸ்பெண்டு செய்து பிறப்பித்த உத்தரவை காங்கிரஸ் கட்சி திரும்ப பெற்று கொண்டது.

இந்நிலையில், இன்று ராஜஸ்தான் சட்டசபை கூடியது. காலையில் கனமழை பெய்ததால் கூட்டம் பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அப்போது முதல்வர் அசோக் கெலாட் தனக்கு 125 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். பின்னர் குரல் வாக்கெடுப்பில் அசோக் கெலாட் தலைமையிலான அரசு வெற்றி பெற்றதாக சட்டசபை சபாநாயகர் தெரிவித்தார்.

சட்டசபையில் இருந்து வெளியே வந்த முதல் மந்திரி அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் சந்தோச அலை பரவியுள்ளது. பா.ஜ.க.வின் சதி திட்டம் தோல்வியடைந்து உள்ளது. இந்த வெற்றி ராஜஸ்தான் மக்களின் வெற்றியெனவே நான் நினைக்கிறேன்.

நாங்கள் இனி கொரோனாவுக்கு எதிரான போரில் இணைந்து பணியாற்றவுள்ளோம் என கூறினார். மத்திய பிரதேசம், கர்நாடகா, மராட்டியம், கோவா, மணிப்பூர் மற்றும் அருணாசல பிரதேசத்தில் பின்பற்றிய அதே சதி திட்டத்தினை ராஜஸ்தானிலும் செயல்படுத்த பா.ஜ.க.வினர் முயன்றனர்.  ஆனால் அவர்களது திட்டம் வெளிப்பட்டு விட்டது என கூறியுள்ளார்.

இதனால் கடந்த ஒருமாத காலமாக நடைபெற்று வந்த குழப்பங்கள் முடிவுக்கு வந்துள்ளது. இன்னும் ஆறு மாதத்திற்கு அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு கோர முடியாது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top