மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி! – உச்ச நீதிமன்றம்

நீதிபதிகளின் செயல்பாட்டை விமர்சித்த மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட நீதிபதிகளின் செயல்பாட்டை விமர்சித்து சமூக வலைத்தளத்தில் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் பதிவிட்டு இருந்தார். இதை கவனத்தில் எடுத்த உச்ச நீதிமன்றம், தானாக முன் வந்து பிரஷாந்த் பூஷனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்து விசாரித்தது.

இந்த வழக்கின் விசாரணை  முடிந்த நிலையில்,,  இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது.  பிரசாந்த் பூஷணுக்கு விதிக்கப்படும் தண்டனை குறித்த வாதம் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே ஹார்லி டேவிட்ஸன் பைக்கில் அமர்ந்தவாறு ஒரு புகைப்படம் எடுத்திருந்தார். அந்தப் படம் குறித்து பிரசாந்த் பூஷண் விமர்சித்து, முகக்கவசம், ஹெல்மெட் இல்லாமல் அமர்ந்த தலைமை நீதிபதி என்று விமர்சித்தார்.

ஆனால், உண்மையில், தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே அந்த பைக்கை இயக்கவில்லை, நின்றிருந்த அந்தபைக்கில் அமர்ந்து மட்டுமே பார்த்தார், அமரும் வரை முகக்கவசம் அணிந்திருந்தார் என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவுக்கு ஆதரவாக  நீதிமன்ற வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

இதையடுத்து, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீது தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் அவமதிப்பு வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் பி.ஆர்.காவே, கிருஷ்ணா முராரே ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த வழக்கில் விளக்கம் அளிக்கக் கோரி கடந்த மாதம் 22-ம் தேதி பிரசாந்த் பூஷணுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

ஆனால், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், அளித்த விளக்கத்தில் ” தான் பதிவிட்ட ட்விட்களுக்கு மன்னிப்பு கோர மறுத்துவிட்டார். தலைமை நீதிபதி போப்டே நின்றிருந்த பைக்கில்அமர்ந்திருந்தார் என்பதை கவனிக்கவில்லை என்பதால் அதற்கு மட்டும் வருத்தம் கேட்கிறேன். ஆனால், மற்றொரு ட்விட் என்பது பேச்சு, கருத்து சுதந்திரத்துக்கு உட்பட்டது என்று தெரிவித்தார். இந்த ட்விட்டர் கருத்து எந்த நீதிபதிக்கும் எதிரானது அல்ல, அவர்களின் நடத்தை பற்றியதுதான், அது நீதிமன்ற நிர்வாகத்தை பற்றியது அல்ல என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் பிரசாந்த் பூஷண் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதிடுகையிலும்,” பிரசாந்த் பூஷண் பதிவிட்ட இரு ட்விட்களும் நீதிமன்றத்துக்கு எதிரானது அல்ல” எனத் தெரிவித்திருந்தார்

இதையடுத்து, இந்தவழக்கை விசாரித்த நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கடந்த 5-ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் பி.ஆர்.காவே, கிருஷ்ணா முராரே ஆகியோர் அமர்வு இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. அவருக்கான தண்டனை வரும் 20-ம் தேதி அறிவிக்கப்படும் என அறிவித்தனர்.

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு குறைந்தபட்சமாக 6 மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.2 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஒரு மனித உரிமை போராளி, மக்களுக்கான வழக்கறிஞர். எந்த அரசு வந்தாலும் மக்களுக்கு எதிரான திட்டங்கள் கொண்டுவந்தால் முதலில் எதிர்ப்பவர் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்.அதுபோல சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான திட்டங்களை அரசு கொண்டுவந்தால் அதை எதிர்த்து போராடுபவரும் அவரே.சமீப காலமாக மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வரும் பல திட்டங்கள் மக்கள் விரோத திட்டங்களாக இருப்பதால் அவைகளை எதிர்த்து தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருப்பவர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அவரை செயல்படாமல் செய்வதற்கு இது ஒரு உத்தியாக கூட இருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.   


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top