கலவரத்தை தூண்டும் எஸ்.வி சேகர் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு

தேசிய கொடியை அவமதித்து வீடியோ வெளியிட்ட பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் மீது சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பாஜக நிர்வாகி எஸ்.வி சேகர் சமீபத்தில் அதிமுக அரசை விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்தார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்திருந்தனர்.

வழக்கு போட்டால் ஓடி ஒளிந்துகொள்வார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். இந்த நிலையில், மீண்டும் அரசு மற்றும் முதல்வர் குறித்து எஸ்.வி சேகர் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இதனிடையே, முதல்வரின் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில், பாஜகவை சேர்ந்த எஸ்.வி.சேகர் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், காவி ஆடையை அணிந்தால் முதல்வர் களங்கம் என்கிறார். அப்படியென்றால், தேசிய கொடி நமக்கு களங்கமா? வரும் ஆக.15ம் தேதி தேசிய கொடியில் காவியை அகற்றி விட்டு கொடியை ஏற்றப்போகிறாரா? காவி நிறம் களங்கம் என்றால் தேசியக் கொடியில் ஏன் காவி நிறம் என்கிற வகையில் பேசியிருந்தார்.

தேசிய கோடியை அவமதிக்கும் விதமாகவும், முதலமைச்சரை அவமதிக்கும் விதமாகவும், நாடு மக்களிடையே பிளவை உண்டாகும் விதமாகவும் பேசியதை அடுத்து இது தொடர்பாக ராஜரத்தினம் என்பவர் சென்னை போலீசில் புகாரளித்திருந்தார்.

இந்த நிலையில்,தேசிய கொடியை மத அடையாளங்களுடன் ஒப்பிட்டு பேசியதாக, அவர்மீது 2 பிரிவுகளின் கீழ் மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நேற்று இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், ”தேசிய கொடியை அவமதித்ததும், முதல்வர் பற்றி அவதூறாகப் பேசியதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. எஸ்.வி.சேகர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். அவர் சிறைக்குச் செல்ல வேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசை, அரசு அதை நிறைவேற்றும்” என்று கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top