தமிழகத்தில் பாஜகவுக்கு எதிர்க்கட்சியாக வர ஆசை வந்துவிட்டது: அமைச்சர் கடம்பூர் ராஜூ

அடுத்த ஆண்டு வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கும், பாஜகவுக்கும் தான் போட்டி என வி.பி. துரைசாமி கூறியுள்ளது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே தெற்கு வண்டானத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வென்ற தே.மு.தி.க. எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றது. தொடர்ந்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரானார். அந்தத் தேர்தலில் திமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்துகூட கிடைக்கவில்லை.

அதேபோன்று தற்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் உள்ள பா.ஜனதாவுக்கு எதிர்க்கட்சியாக வர வேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறது. தமிழகத்தில் அ.தி.மு.க.தான் என்றும் முதலிடம். தி.மு.க.-பா.ஜனதா இடையே 2-வது இடத்திற்கு வருவதற்குதான் போட்டி நிலவுகிறது.

தி.மு.க.வில் இருந்து முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து வெளியேறுவார்கள் என்று மு.க.அழகிரியும் கூறி உள்ளார். தி.மு.க.வில் நடப்பது குடும்ப அரசியல். கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் தி.மு.க.வின் குடும்ப அரசியலை எதிர்த்து, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிரசாரம் செய்து வெற்றி கண்டார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை ஏற்று கொள்ளும் மனநிலையில் கனிமொழி எம்.பி. இல்லை. கனிமொழியை ஏற்று கொள்ளும் மனநிலையில் மு.க.ஸ்டாலின் இல்லை. எனவேதான் அவர் தன்னுடைய மகன் உதயநிதி ஸ்டாலினை அனைத்து இடங்களிலும் முன்னிலைப்படுத்தி வருகிறார். இதை நாங்கள் சொன்னால் அரசியல் தான் இருக்கும். அந்தக் குடும்பத்தில் கருணாநிதியின் மூத்த மகனாக உள்ள மு.க.அழகிரி அந்த கருத்தை சொல்லி இருக்கிறார்.

இதனால்தான் வி.பி.துரைசாமி, கு.க.செல்வம் போன்றோர் தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜனதாவுக்கு சென்றுள்ளனர். இதன் காரணமாகத்தான் வி.பி. துரைசாமி அங்கிருந்து வெளியேறியுள்ளார். சட்டப்பேரவை உறுப்பினர் கு.க.செல்வம் வெளிப்படையாகச் சென்று பாஜகவில் இணைந்துள்ளார். தைரியம் இருந்தால் என்னை நிரந்தரமாக நீக்கிப் பாருங்கள் என சவால்விடும் அளவுக்கு சென்றுள்ளார்.

இப்படியாக கட்சிக்குள் நிலவும் மனக்குமுறல்கள் எங்களை விட அழகிரிக்குத் தான் நன்றாகத் தெரியும். எனவே அவர் சொல்கின்ற கருத்து நிச்சயமாக பிரதிபலிக்கும்” என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top