தனியார் மயமாகும் ரயில்வே துறை; ஆலோசனைக் கூட்டம்; ரயில்கட்டணத்தை தனியாரே முடிவு செய்வார்கள்

இந்தியாவில் லாபத்தில் இயங்கும் ரயில்வே துறையில்  தனியார் துறையின் பங்களிப்பை உண்டாக்க மத்திய அரசு திட்டமிட்டு ஆலோசனை கூட்டம்.ரயில் கட்டணத்தையும் தனியாரே நிர்ணயிக்க முடிவு!  

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் திட்டங்களை தீட்டி, ஒவ்வொன்றாக தனியாரிடம் ஒப்படைத்து வருகிறது.அந்த பட்டியலில் ரயில்வேயும் சேர்ந்து இருக்கிறது.  

இந்தியாவில் லாபத்தில் இயங்கும் ரயில்வே துறை பொதுத்துறை நிறுவனமாக இருந்து வருகிறது. இதில் தனியார் துறையின் பங்களிப்பை உண்டாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் தனியார்துறை ரயில்களை இயக்குவது தொடர்பான திட்டத்தில் விண்ணப்பம் செய்வதற்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் அல்ஸ்டாம் டிரான்ஸ்போர்ட், பாம்பார்டயர் டிரான்ஸ்போர்ட், சீமன்ஸ் லிமிட், ஜிஎம்ஆர் இன்ப்ரா உள்ளிட்ட 23 நிறுவனங்கள் பங்கேற்றன.

இந்நிலையில் நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட அதிகமான வருவாய் தரக்கூடிய, மக்கள் போக்குவரத்து இருக்கக்கூடிய தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதில் தனியார் ரயில்கள் இயக்கத் திட்டமிடப்பட்டது.

இந்த தனியார் ரயில்கள் இயக்கத்துக்கு விண்ணப்பிப்பதற்கான முன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன் கடந்த போட்டி ஏலத்தின் ஒரு பகுதியாக, ஜூலை 21-ம் தேதி நடந்த விண்ணப்பத்திற்கு முந்தைய கூட்டம் மத்திய ரயில்வே அமைச்சகத்தால் நடத்தப்பட்டது. இதில் 16 பேர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் விண்ணப்பத்திற்கு முந்தைய 2-வது கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் 23 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன.

இதுகுறித்து ரயில்வே துறை சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

”தனியார் ரயில்கள் இயக்கத்துக்கு விண்ணப்பிப்பதற்கான முன் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் அல்ஸ்டாம் டிரான்ஸ்போர்ட் இந்தியா, பாம்பராடயர் டிரான்ஸ்போர்ட் இந்தியா, சீமன்ஸ் லிமிட், ஜிஎம்ஆர் கட்டுமானம், 12 பொதுத்துறை நிறுவனங்கள், பிஇஎம்எல், ஐஆர்சிடிசி, பிஹெச்இஎல், ஸ்பெயினின் சிஏஎப் இந்தியா, மேதா குழுமம், ஸ்டெர்லைட், பாரட் போர்ஜ், ஜேகேபி கட்டுமானம், டாடாகார்க் வேகன்ஸ் லிமிட் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்றன.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள், தலைவர்கள், ரயில் குறித்த கேள்விகள், ஏலத்தில் பங்கேற்கும் தகுதி, ரயில் கொள்முதல், கட்டண நிர்ணயம், செயல்பாடு, பராமரிப்பு, ரயில் நேரம், நிறுத்தங்கள் குறித்துக் கேள்விகள் எழுப்பினர்.

இந்தக் கேள்விகளுக்கு ரயில்வே உயர் அதிகாரிகளும், நிதி ஆயோக் அமைப்பின் அதிகாரிகளும் உரிய விளக்கத்தை அளித்தனர். தகுதிக்கான கோரிக்கை, மற்றும் திட்டக் கோரிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பம் செய்யும் தேதி செப்டம்பர் 8-ம் தேதி தொடங்குகிறது.

ரயில்களை இயக்கும் தனியார் நிறுவனங்களுக்கு ரயிலுக்கான கட்டணத்தையும் நிர்ணயம் செய்ய உரிமை உண்டு. எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை.

ரயில்களை இயக்குவது, கொள்முதல் செய்வது, வாடகைக்கு எடுப்பது என அனைத்திலும் தனியார் நிறுவனங்களுக்கு முழுமையான சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது”. என ரயில்வே துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆட்சியில் ஒட்டுமொத்த இந்தியாவையும் தனியாரிடம் ஒப்படைத்து ஆட்சி நடத்தி வருகிறது என சமூக ஆர்வலர்கள் கருத்து சொல்கிறார்கள்.  


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top