காற்றழுத்தத் தாழ்வு நிலை; தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

ஆந்திர கடலோரத்தில் காற்றழுத்தத் தாழ்வு நிலை! தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழச்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கேரள எல்லையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில கடலோரப் பகுதிகளில் புதிதாக காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-


“ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகளில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திரா, ஒடிசா கடலோரப் பகுதிகளில் இன்று பலத்த காற்று சுமார் 40-50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top