அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்தா முருகனும், நளினியும் பேசப்போகிறார்கள்? – ஐகோர்ட்டு கேள்வி

வெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் பேச அனுமதி கேட்ட வழக்கில் “அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்தா முருகனும், நளினியும் விவாதிக்கப்போகிறார்கள்”? என்று மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சேர்க்கப்பட்டு தண்டனை பெற்ற நளினி. அவரது கணவர் முருகன் ஆகியோர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு முருகனின் தந்தை இலங்கையில் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவரது இறுதிசடங்கை வாட்ஸ்ஆப் வீடியோகாலில் பார்க்க முருகன் அனுமதி கோரியபோது, தமிழக சிறைத்துறை வழங்கவில்லை.

இந்தநிலையில், நளினியின் தாயார் பத்மா, சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அதில், இலங்கையில் உள்ள முருகனின் தாயார், லண்டனில் உள்ள சகோதரி ஆகியோருடன் முருகனும், நளினியும் வாட்ஸ்ஆப் வீடியோகாலில் பேச அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, மனிதாபிமான அடிப்படையில் பேச அனுமதி வழங்கினால் என்ன? என்று மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியிருந்தது. ஆனால், வெளிநாட்டை சேர்ந்த சிறை கைதிகளை உறவினர்களுடன் பேச அனுமதிக்க முடியாது என்று மத்திய, மாநில அரசுகள் பதிலளித்தன. இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், “ராஜீவ்காந்தி படுகொலையில் உள்ள வெளிநாட்டு தொடர்பு குறித்து விசாரித்து வரும் பல்நோக்கு விசாரணை முகமை, நளினி, முருகன் ஆகியோரை வெளிநாட்டில் இருக்கும் உறவினர்களுடன் வீடியோகாலில் பேச அனுமதித்தால், அது தங்களது விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்” என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “வெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்தா முருகனும், நளினியும் விவாதிக்கப்போகிறார்கள்? அவர்கள் அதிகாரிகள் முன்னிலையில் தமிழில் பேச போகிறார்கள். அவர்களது பேச்சில் தவறு இருந்தால், அந்த இணைப்பை அதிகாரிகள் உடனே துண்டிக்க முடியும். இவர்கள் பேசுவதால் பல்நோக்கு விசாரணை முகமையின் புலன் விசாரணை எப்படி பாதிக்கும்?” என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு மனுதாரர் தரப்பு வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன், “ஜெயின் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில், ராஜீவ்காந்தி கொலையில் உள்ள வெளிநாட்டு தொடர்பு குறித்து விசாரிக்க 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பல்நோக்கு விசாரணை முகமையின் பதவி காலத்தை 2015-ம் ஆண்டுக்கு பின்னர் நீட்டிக்கப்படவில்லை. எனவே, பல்நோக்கு விசாரணை முகமை என்ற அமைப்பே இப்போது செயல்பாட்டில் இல்லை” என்றார்.

இதை மறுத்து மாநில தலைமை குற்றவியல் அரசு வக்கீல் ஏ.நடராஜன், “2018-ம் ஆண்டு பேரறிவாளன் வழக்கை சுப்ரீம்கோர்ட்டு விசாரித்தபோது இந்த விசாரணை முகமை அறிக்கை தாக்கல் செய்துள்ளது” என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், “ராஜீவ்காந்தி படுகொலையில் வெளிநாட்டு தொடர்பு குறித்து விசாரிக்கும் பல்நோக்கு விசாரணை முகமை தற்போது செயல்படுகிறதா? அந்த அமைப்பின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து வருகிற 19-ந்தேதிக்குள் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்” என்று உத்தரவிட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top