கிரானைட் முறைகேடு வழக்கு; பிஆர்பி விடுதலை ரத்து: ஐஏஎஸ் அதிகாரி மீதான நடவடிக்கையும் ரத்து!

பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட 3 பேரை விடுதலை, ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ரா மற்றும் அரசு வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறிய மேலூர் நீதித்துறை உத்தரவு ரத்து

சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்களை அரசு உடையமாக்கக் கோரிய வழக்கில் பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட 3 பேர்களின்  விடுதலையை ரத்து செய்தது உயர் நீதிமன்ற மதுரை கிளை

இந்த வழக்கில் மனு தாக்கல் செய்த ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ரா மற்றும் அரசு வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நீதித்துறை நடுவர் பிறப்பித்த உத்தரவையும் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

மேலூர் அருகே சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு, தனியார் பட்டா நிலங்களில் வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அரசுடமையாக்கக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் இதுவரை 98 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில் பி.ஆர்.பழனிச்சாமி, அவரது மகன் சுரேஷ்குமார் ஆகியோர் மீதான இரு வழக்குகளும், குவாரி அதிபர் ராம.சகாதேவன் ஆகியோர் மீதான ஒரு வழக்கும் மேலூர் நீதித்துறை நடுவர் மகேந்திர பூபதி முன்பு 29.3.2016-ல் விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்குப்பின் பி.ஆர்.பழனிச்சாமி, சுரேஷ்குமார், ராம.சகாதேவன் ஆகியோரை விடுதலை செய்து மேலூர் நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.

மேலும், நடுவர் தனது உத்தரவில், இந்த வழக்குகளை 2013-ல் தாக்கல் செய்த ஐஏஎஸ் அதிகாரி அன்சுல்மிஸ்ரா, அப்போது மாவட்ட ஆட்சியராக இல்லை என்றும், இருப்பினும் தான் ஆட்சியராக இருப்பதாக சொல்லி வழக்குகளை தாக்கல் செய்திருப்பதாகவும், மதுரை மாவட்ட ஆட்சியராக இருப்பதாக கூறி விசாரணையின் போது நேரில் ஆஜராக விலக்கு கோரியதாகவும்.இதனால், அன்சுல்மிஸ்ரா மீதும், அவருக்கு சாதகமாக செயல்பட்ட அரசு வழக்கறிஞர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்தார்.

நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த உத்தரவு தொடர்பாக மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்துக்கு மாவட்ட நீதிபதிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மகேந்திரபூபதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில் பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்தும், ஐஏஎஸ் அதிகாரி, அரசு வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மேலூர் நீதித்துறை நடுவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர் சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் இரு மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதேபோல் பிஆர்பி உள்ளிட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அரசு சார்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்து நீதிபதி பி.புகழேந்தி இன்று பிறப்பித்த உத்தரவு:

பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்தும், ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ரா மற்றும் அரசு வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மேலூர் நீதித்துறை நடுவர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

இந்த வழக்கில் அப்போதைய மாவட்ட ஆட்சியர், கனிம வளம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் 2 மாதத்தில் ஆஜராக வேண்டும். இந்த வழக்கின் விசாரணையை கனிம வளம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் 2 மாதத்தில் முடிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top