‘ரிட்’ வழக்கிற்கு நீதிமன்ற கட்டணம் பல மடங்கு உயர்வு! ஐகோர்ட்டில் வழக்கு; விசாரணை தள்ளிவைப்பு!

தமிழகத்தில் ரிட் மனுவிற்கு நீதிமன்ற கட்டணத்தை மற்ற மாநிலங்களை விட பல மடங்கு உயர்த்தியதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது

மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் நீதிமன்ற கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியதை எதிர்த்த வழக்கு தொடர்பாக விசாரித்த ஐகோர்ட்டு விசாரணையை 6 வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கே.வசந்த். டாஸ்மாக் ஊழியரான இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி நேரம் நிர்ணயிக்கவில்லை. சொற்ப தொகை ஊதியமாக வழங்கப்படுகிறது. இதுகுறித்து, 166 டாஸ்மாக் ஊழியர்கள், சென்னையில் உள்ள தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், எங்களுக்கு கூடுதல் நேர பணி ஊதியம், தேசிய மற்றும் பண்டிகைகால விடுமுறை நாட்கள் ஊதியம் உள்ளிட்டவைகளை பெற தகுதியுள்ளது என்று கூறி ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் தலா ரூ.2 லட்சம் வழங்க தீர்ப்பளித்தது.

ஆனால் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க மறுத்து விட்டது. இதனால் பாதிக்கப்பட்ட 166 ஊழியர்களும், தனித்தனியாக ஐகோர்ட்டில் வழக்கு தொடர வேண்டும் என்றும், அதற்கு ஒவ்வொருவரும் நீதிமன்ற கட்டணமாக தலா ரூ.1,000 செலுத்த வேண்டும் என்றும் எங்கள் வக்கீல் கூறினார். அதாவது 166 பேரும் மொத்தமாக ரூ.1 லட்சத்து 66 ஆயிரம் நீதிமன்ற கட்டணமாக செலுத்தவேண்டும். ஆனால், கீழ்கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்தும், ஒட்டுமொத்த ஊழியர்களுக்கு எதிராக ஒரே ஒரு ரிட் மனுவை அரசு தாக்கல் செய்யலாம். தனித்தனியாக அரசு வழக்கு தொடரவேண்டிய நிலை இல்லை.

முன்பு ரூ.100 ஆக இருந்து நீதிமன்ற கட்டணம் ரூ.200 ஆக உயர்த்தப்பட்டது. ஆனால் கடந்த 2017-ம் ஆண்டு தமிழக அரசு நீதிமன்ற கட்டணத்தை பல மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது, அரசுக்கு எதிராக ‘ரிட்’ வழக்கை தாக்கல் செய்ய கட்டணமாக ரூ.200-ல் இருந்து ரூ.1,000-மாகவும், ‘ரிட்’ (அப்பீல்) மேல்முறையீட்டு வழக்கை தாக்கல் செய்ய கட்டணமாக ரூ.200-ல் இருந்து ரூ.2 ஆயிரமாகவும் உயர்த்தியுள்ளது. இதே காலக்கட்டத்தில், பிற மாநிலங்களில் நீதிமன்ற கட்டணம் உயர்த்தப்பட்டாலும், ரூ.200 அல்லது அதற்கு குறைவாகத்தான் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. சுப்ரீம் கோர்ட்டில் கூட இதுபோன்ற வழக்குகளை தாக்கல் செய்ய ரூ.500 தான் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்களில் ரூ.200 தான் வசூலிக்கப்படுகின்றன. ஆனால் தமிழகத்தில் ‘ரிட்’ வழக்கிற்கு ரூ.1,000 என்றும், ரிட் மேல்முறையீட்டு வழக்கிற்கு ரூ.2 ஆயிரம் என்றும் அதிக கட்டணம் நிர்ணயித்து வசூலிப்பது நியாயமற்றது. தன்னிச்சையானது ஆகும்.

நீதி கேட்டு நீதிமன்றம் வருவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமையாகும், அதை பாதிக்கும் விதமாக இவ்வாறு கட்டணத்தை உயர்த்தியது பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதேநேரம் குற்றவழக்குகளில் சிக்குபவர்களிடம் இருந்து மிகக்குறைந்த நீதிமன்ற கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஜாமீன் மனுவுக்கு ரூ.20, குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் இருப்பவர்களுக்காக தாக்கல் செய்யப்படும் ஆட்கொணர்வு மனுவுக்கு ரூ.20 என்று சொற்ப தொகைதான் நீதிமன்ற கட்டணமாக வசூலிக்கப்படுகின்றன. எனவே, ரிட் வழக்கிற்கு ரூ.1,000 என்றும், ரிட் மேல்முறையீட்டு வழக்கிற்கு ரூ.2 ஆயிரம் என்றும் நீதிமன்ற கட்டணத்தை நிர்ணயித்து 2017-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு நீதிமன்றம் கட்டணம் மற்றும் வழக்குகள் மதிப்பீட்டு சட்டத்திருத்தத்தை சட்டவிரோதம் என்றும் ,அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும் உத்தரவிடவேண்டும். பழைய கட்டணமாக ரூ.200-ஐ வசூலிக்க ஐகோர்ட்டு தலைமை பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும்.என்று மனுவில் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் கே.எம்.ரமேஷ் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை 6 வாரத்துக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top