இஐஏ 2020 அறிக்கை – கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு

மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை (EIA) 2020 தற்போது வெளிவந்துள்ளது. இந்த திட்டம் நடைமுறை படுத்தப்பட்டால் இந்தியாவின் அணைத்து இயற்கை வளங்களும் அழிந்து விடும் என்று சுற்றுசூழல் ஆராய்ச்சியாளர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் மற்றும் அரசியல் இயக்கங்களும் இதற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள்.

இந்த திட்டத்தின் பாதிப்பை இந்தியாவில் உள்ள பல மொழி பேசும் மக்கள் அறிய கூடாது என்பதற்காகவே வெறும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் மத்திய அரசு அறிக்கையை வெளியிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை 2020 பற்றி பொதுமக்களிடம் கருத்துகள் கேட்க அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த மதிப்பீட்டு அறிக்கையை ஆங்கிலம், இந்தி உள்பட 22 இந்திய மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டால்தான் அதுபற்றி சரியான கருத்துக்களை பொதுமக்களால் கூறமுடியும் என்று கூறி, அதற்கு உத்தரவிட வேண்டும் என சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர் விக்ராந்த் டோங்கட் என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சஞ்சீவ் சச் தேவா, ஜூன் 30-ந்தேதி 10 நாட்களுக்குள் 22 மொழிகளிலும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டார். இதன்படி பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்கான கடைசி தேதியை ஆகஸ்டு 11-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் கோர்ட்டு உத்தரவுப்படி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை 22 இந்திய மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்து மத்திய அரசு வெளியிடவில்லை. இதனைத்தொடர்ந்து டோங்கட் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மத்திய அரசுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், மத்திய அரசு மீது அவமதிப்பு நடவடிக்கை கோரும் மனுவுக்கு வருகிற 17-ந் தேதிக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் அரசியலமைப்பின் 8-வது அட்டவணைப்படி பிற மொழிகளிலும் அறிக்கை வெளியிடப்பட்டால் அது திறம்பட பரவுவதற்கு உதவியாக இருக்கும் என்றும், மொழிபெயர்ப்புக்கு மாநில அரசின் உதவியையும் கோரலாம் என்றும், இந்த மொழிபெயர்ப்புகள் மத்திய, மாநில சுற்றுச்சூழல் அமைச்சகங்களின் வலைத்தளங்களில் 10 நாட்களுக்குள் வெளியிடப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top