தயார் நிலையில் போக்குவரத்து கழகங்கள்;மத்திய அரசின் கண்ணசைவிற்கு காத்திருக்கும் தமிழக அரசு!

தமிழகத்தில் அனைத்து போக்கு வரத்துக் கழகங்களும் இயங்க தயாராக  உள்ள நிலையில் யாருக்காக காத்திருக்கிறது தமிழக அரசு என தொழிற்சங்கங்கள் கேள்வி எழுப்புகின்றன

தமிழகத்தில் வரும் 15-ம் தேதிக்குபிறகு பேருந்து சேவையை தொடங்குவது குறித்து அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதையொட்டி அனைத்து போக்கு வரத்துக் கழகங்களும் தயார் நிலையில் உள்ளன.

ஊரடங்கு வரும் 31-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட பணிமனைகளில் 20 ஆயிரம் அரசுபேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதேபோல், ரயில்களின் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளன. பேருந்துகள், ரயில்கள் ஓடாததால்,மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

எனவே பொது போக்குவரத்து வசதியை படிப்படியாக தொடங்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே, தமிழக அரசு அறிவித்தவுடன் பேருந்துகளின் சேவையை மீண்டும் தொடங்கும்வகையில் தயார்படுத்திக் கொள்வது தொடர்பாக போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஆகஸ்ட் 15-க்குப் பிறகு பேருந்துகளை இயக்க அரசு உத்தரவிட்டால், அதற்கு ஏற்ற வகையில் செயல்பட பேருந்துகளை தயார்படுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கொரோனா ஊடரங்கு வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பெரும்பாலான நிறுவனங்கள், தொழிற்சாலைகள் செயல்படத் தொடங்கியுள்ளதால், பேருந்து சேவையை தொடங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழக அரசு அறிவித்தவுடன் பேருந்துகளை இயக்க நாங்கள் தயாராக உள்ளோம். ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு முகக் கவசங்கள், கை கழுவும் திரவங்கள், கையுறைகள் உள்ளிட்டவை வாங்கி தயாராக வைக்கப்பட்டுள்ளன. தேவையான அளவுக்கு பேருந்துகளை இயக்க வழித்தடங்களை தயார் செய்து வருகிறோம்’’என்றனர்.

போக்குவரத்து தொழிற்சங்கவாதிகளிடம் இது குறித்து கேட்டபோது “நிறுவனங்கள், தொழிற்சாலைகள் செயல்படத் தொடங்கிய நிலையில் பொதுமக்களுக்கு போக்குவரத்து சேவை அவசியம் இதை தமிழக அரசு உணரவேண்டும். கொரோனா ஊரடங்கை பொறுத்தவரை தன்னிச்சையாக முடிவு எடுக்காமல், மத்திய அரசின் கண்ணசைவிற்கு ஏற்ப தமிழக அரசு செயல்படுகிறது நல்லதல்ல!  வரும் ஆகஸ்ட் 15-ம் தேதிக்கு பிறகாவது  பேருந்து சேவையை தொடங்க அனுமதி வழங்கவேண்டும்” என்றனர்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top