ராஜினாமா செய்தது லெபனான் அரசு; வீதியில் இறங்கி போராடிய மக்கள்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் கடந்த 4-ந் தேதி வெடித்துச் சிதறியது. இந்த பயங்கர வெடி விபத்து ஒட்டுமொத்த பெய்ரூட் நகரை தலைகீழாக புரட்டிப் போட்டுவிட்டது. இந்த விபத்தில் 160-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். மேலும் இந்த வெடி விபத்தில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்தனர்.

உலக வரலாற்றில் நடைபெற்ற வெடிவிபத்தில் மிகப் பெரும் வெடிவிபத்தாக இந்த துயரச் சம்பவம் பார்க்கப்படுகிறது.

கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் லெபனான் அரசு பொது மக்களுக்கு உரிய நிவாரணம் அளிக்க முடியாமல் திணறி வருகிறது. பலர் வீடுகளை இழந்து சாலைகளில் வசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உணவு கிடைக்காமல் திண்டாடுகின்றனர்.

இந்த கோரமான வெடி விபத்துக்கு அரசாங்கம் மற்றும் அதிகாரிகளின் அலட்சியம்தான் காரணம் என்று பெய்ரூட் மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் அரசின் அலட்சிய போக்கை கண்டித்து பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கினர்.

நேற்று முன்தினம் மாலை நூற்றுக்கணக்கான மக்கள் பெய்ரூட்டில் உள்ள அமைச்சக கட்டிடங்களுக்குள் புகுந்து சூறையாடினர். ஆட்கள் இன்றி காலியாக இருந்த வெளியுறவு அமைச்சகத்தின் கட்டிடத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் இனி இந்த கட்டிடம் போராட்ட அமைப்பின் தலைமையகமாக இருக்கும் என அறிவித்தனர். அதே போல் பொருளாதாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகங்களின் கட்டிடங்களையும் போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்து தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதைத் தொடர்ந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பெய்ரூட் நகரில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று இந்த போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. போலீசாரும், ராணுவத்தினரும் போராடும் மக்களை கண்மூடித்தனமாக தாக்கியதால் கோபம் அடைந்த போராட்டக்காரர்கள் அரசு அலுவலகங்களை அடித்து நொறுக்கியதோடு சாலைகளில் வாகனங்களுக்கு தீ வைத்தனர்.

இந்தநிலையில், அந்நாட்டின் பிரதமர் டியாப் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் டியாப் தலைமையிலான அரசு மொத்தமாக பதவி விலகுவதாக முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து தமது அரசின் பதவி விலகல் அறிவிப்பை, நாட்டு மக்களிடம் தொலைக்காட்சியில் தோன்றி ஹஸ்ஸன் டியாப் வெளியிட்டார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top