வெனிசுலா அதிபரை கொல்ல சதி – அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர்கள் 2 பேருக்கு 20 ஆண்டு சிறை!

வெனிசுலாஅதிபர் நிக்கோலஸ் மதுரோவை கொலை செய்ய அமெரிக்காவை சேர்ந்த பாதுகாப்பு நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்ட இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை  விதித்தது வெனிசுலா நீதிமன்றம்

எண்ணெய் வளமிக்க தென்அமெரிக்க நாடான வெனிசுலாவில் அந்த நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுராவை பதவியிலிருந்து இறக்கி விட்டு அங்கு புதிய ஆட்சியை அமைப்பதற்கு அமெரிக்கா முனைப்பு காட்டி வருகிறது.

வெனிசுலாவில் ஆட்சியைக் கவிழ்க்கும் திட்டத்தோடு நாட்டுக்குள் நுழைந்த அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர்கள் 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மே மாதம் கொலம்பியா வழியாக வெனிசுலாவில் சட்ட விரோதமாக நுழைந்த 13 பேரை அந்த நாட்டுப் போலீசார் கைது செய்தனர்

இவர்களில் அமெரிக்காவின் முன்னாள் ராணுவ வீரர்களான லூக் டென்மன் (வயது 34) மற்றும் அயரன் பெர்ரி (41) ஆகிய இருவரும் அடங்குவர்.

இவர்கள் இருவரும் அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் ஆட்சியைக் கவிழ்க்கும் திட்டத்தோடு நாட்டுக்குள் நுழைந்ததாக வெனிசுலா அரசு குற்றம் சாட்டியது.

ஆனால், இந்த குற்றச்சாட்டை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்தது. இதனிடையே போலீஸ் விசாரணையின் போது அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கொலை செய்ய அல்லது அவரை அமெரிக்காவுக்கு கடத்தி செல்ல தாங்கள் இருவரும் அமெரிக்காவை சேர்ந்த பாதுகாப்பு நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்டதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து ஆட்சி கவிழ்ப்பு முயற்சி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு வெனிசுலா கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று முன்தினம் நடந்தது. இதில் அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர்கள் இருவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top