உடலில் ஓவியம் வரைந்து வெளியிட்டதில் சர்ச்சை;ஜாமீன் நிராகரிப்பு; காவல் நிலையத்தில் ரெஹானா பாத்திமா சரண்

உடலில் ஓவியம் வரைந்து வெளியிட்ட விவகாரத்தில், தனது முன் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்ததை தொடர்ந்து ரெஹானா பாத்திமா போலீசில் சரணடைந்தார்.


கேரளாவை சேர்ந்த சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா, கடந்த ஜூன் 19ம் தேதி அன்று தனது உடலில் தனது மகன் மற்றும் மகள் வரைந்த ஓவியத்தை இணையத்தில் பகிர்ந்தார். இந்த பதிவுக்கு வழக்கம் போல கலாச்சாரக் காவலராக தன்னை கருதிக்கொள்ளும்  பாஜக கண்டனம் தெரிவித்த நிலையில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பு ரெஹானா பாத்திமா மீது வழக்கு பதிந்தது.


கடந்த ஜூன் மாதம் ரெஹானா பாத்திமா தன் மைனர் குழந்தைகளை வைத்து தனது உடலில் ஓவியம் வரைய வைத்து, ‘உடல் மற்றும் அரசியல்’ என்ற தலைப்பில் வீடியோவை வெளியிட்டார். முகநூலில் வீடியோவையும், புகைப்படங்களையும பதிவிட்டு, விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் ஆண், பெண் உடல் குறித்த கருத்துகளையும் ரெஹானா பாத்திமா பதிவிட்டிருந்தார்.

ஏற்கெனவே சர்ச்சைகளுக்குப் பெயரெடுத்த ரெஹானா பாத்திமா வெளியிட்ட வீடியோவும் கேரள மாநிலத்தில் வைரலானது, ஆதரவும் ,எதிர்ப்பும் கிளம்பியது. தனது குழந்தைகளை வைத்து அரை நிர்வாண உடலில் எவ்வாறு ஓவியம் வரையலாம், இது குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல் என்று பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன.

பத்தனம்திட்டா மாவட்ட பாஜக தலைவர் ஏ.வி.அருண் பிரகாஷ் திருவல்லா போலீஸில், ரெஹானா பாத்திமாவின் சர்ச்சைக்குரிய வீடியோவைக் காண்பித்து அவர் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டத்திலும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சட்டமான போக்சோ சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க புகார் அளித்தார்.

மேலும், இந்த விவகாரத்தை மாநில குழந்தைகள் நல உரிமை ஆணையமும் கையில் எடுத்து வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து,ரெஹானா பாத்திமா மீது போக்சோ சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம், சிறார் நீதிச்சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ரெஹானா பாத்திமா தாக்கல் செய்திருந்த மனுவைக் கடந்த மாதம் 14-ம் தேதி கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ரெஹானா பாத்திமா மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுதாரர் சார்பில் கோபால் சங்கரநாராயணன் ஆஜரானார்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர் காவே, கிருஷ்ணா முராரி ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கோபால் நாராயணன் வாதிடுகையில், “ரெஹானா பாத்திமா மீது குழந்தைகளை வைத்து பாலியல் படம் எடுக்கும் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. தனது குழந்தைகளை வைத்து அவர் தனது அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைய வைத்துள்ளார்.

இந்த நாட்டில் ஓர் ஆண் அரை நிர்வாணமாக நின்றால் குற்றமில்லை. ஆனால், ஒரு பெண் அரை நிர்வாணமாக நின்றால் குற்றமாகிறது. தனிமனிதராக ரெஹானாவைப் பார்க்காமல், அவரின் முன்ஜாமீன் மனுவைப் பரிசீலிக்க வேண்டும்.

மனுதாரரிடம் இருந்து பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டு, அவரிடம் வாக்குமூலம் வாங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் போலீஸ் காவல் விசாரணை எதற்காக அவசியம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகள் ஆடை அணிந்துதான் இருந்தார்கள். ஆனால், தவறான குற்றச்சாட்டு மனுதாரர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தார்.

இதைக் கேட்ட நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர் காவே, கிருஷ்ணா முராரி ஆகியோர் கூறுகையில், “ என்ன மாதிரியான வழக்கு எங்களிடம் வந்திருக்கிறது. இது சற்று குழப்பாக இருக்கிறது. மனுதாரர் சமூகச் செயற்பாட்டாளராக இருக்கலாம். ஆனால், இதுபோன்ற செயல்கள் நினைத்துக்கூடப் பார்க்க முடியாதது.

இந்த தேசத்தின் உயர்ந்த கலாச்சாரம் குறித்து ரெஹானா பாத்திமா என்ன மாதிரியான தாக்கத்தை தனது குழந்தைகளுக்கு அவரின் உடலில் ஓவியம் வரைய வைப்பதன் மூலம் கற்றுக்கொடுக்கப் போகிறார்.

சமூகத்தின் மோசமான ரசனையாக இருக்கிறது. இந்த மனுவின் அனைத்து அம்சங்களையும் உயர் நீதிமன்றம் விரிவாகப் பரிசீலித்துவிட்டது. ஆதலால், மனுவைத் தள்ளுபடி செய்கிறோம்” எனத் தெரிவித்தனர். இந்நிலையில் எர்ணாகுளத்தில் உள்ள தேவரா தெற்கு காவல் நிலையத்தில் ரெஹானா பாத்திமா சரணடைந்தார். 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top