தமிழகத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள புதிதாக 882 சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அனுமதி!

அரசு பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிற நிலையில் கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்தில் 882 புதிய சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக கல்வித்துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இதுதவிர சி.பி.எஸ்.இ., கேந்திரிய வித்யாலயா, சி.ஐ.எஸ்.சி.இ. போன்ற பள்ளிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. தமிழகத்தில் அரசு பள்ளிகளின் எண்ணிக்கை அவ்வப்போது குறைந்து வருவதாக பல்வேறு தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இது ஒரு புறம் இருக்க, தமிழகத்தில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதை கல்வித்துறையின் புள்ளி விவரங்கள் மூலம் பார்க்க முடிகிறது.

மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்த மெட்ரிகுலேசன் பள்ளிகளை மூடிவிட்டு  அதே அளவுக்கு தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகிற சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அமோக வரவேற்பு கொடுத்து மக்கள் மனதில் சிறப்பான கல்விமுறை என்கிற ஒரு பிம்பத்தை உருவாக்கி சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் எண்ணிக்கை புற்றீசல் போல அதிகரித்து வருகிறது.இதற்கு தமிழக அரசே துணை நிற்பதாகவும் மறைமுகமாக மத்திய அரசு திட்டங்களுக்கு உதவுவதாகவும் கல்வியாளர்களிடம் கருத்து நிலவுகிறது


தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, சுமார் 1,100-க்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இவற்றில் கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து 9 ஆண்டு கால இடைவெளியில் மட்டும் புதிதாக 882 பள்ளிகளுக்கு தமிழக அரசால் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. அதிலும் கடந்த 4 ஆண்டுகளில் தான் தமிழகத்தில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.

கடந்த 2011-ம் ஆண்டு முதல் 29, 35, 54, 69, 90, 68, 148, 176, 213 என ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் புதிய சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அதிகஅளவில் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. நடப்பு ஆண்டில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பள்ளிகள் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.


பெரும்பாலான பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் படிக்க வைக்க விரும்புவதாகவும், அந்த பள்ளிகளில் படித்தால் தான் தங்களுடைய பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என நினைப்பதாகவும், இதன் காரணமாகவே சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அப்படியாக உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே பெரும்பாலான மெட்ரிகுலேசன் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகளாக மாற்றிக்கொள்ள ஒவ்வொரு ஆண்டும் அனுமதி கேட்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதற்கான முழு உள்கட்டமைப்பு வசதிகளும் இருக்கின்றனவா? என்பதை ஆய்வு செய்த பின்பு தான் அனுமதி (என்.ஓ.சி.) வழங்கப்படுகிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top