இ-பாஸ்க்கு லஞ்சம்; அரசு அதிகாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் – உயர் நீதிமன்றம் காட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்டுள்ள திருவண்ணாமலையைச் சேர்ந்த 8 முதல் 12-ம் வகுப்பு மாணவிகளை மீட்க கோரி, திருவண்ணாமலையைச் சேர்ந்த தமிழ் தேசிய மக்கள் கட்சி தலைவர் சி.எம்.சிவபாபு தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

கொரோனா போன்ற கொடிய காலங்களிலும் படிக்கும் குழந்தைகளின் வறுமையை பயன்படுத்தி அவர்களை குழந்தை தொழிலார்களாக மாற்றும் அளவிற்கு இந்த சமூகம் சென்று இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

அப்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து இ பாஸ் இல்லாமல் மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், சரியான காரணங்களையும், ஆவணங்களையும் காட்டி முறையாக விண்ணப்பித்தவர்களால் இ பாஸ் பெற இயலாத நிலையில், புரோக்கர்கள் மூலம் 500 ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெற்று அதிகாரிகள், இ பாஸ்கள் வழங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக குறிப்பிட்டனர்.

மேலும், கொரோனா காலத்திலும், ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல செயல்படும் ஊழல் அரசு ஊழியர்களுக்கு எதிராக இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், நூற்பாலைகளில் இருந்து மீட்கப்பட்ட மாணவிகளை குழந்தைகள் நலக் குழுக்கள் மூலம் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனரா என கண்காணிக்க திடீர் சோதனைகள் நடத்த காவல்துறை, தொழிலாளர் நலத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் நலக்குழுக்களுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top