தென்மேற்கு பருவமழை; மேட்டூா் அணையின் நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடியாக உயா்வு!

தென்மேற்கு பருவமழை காரணமாக அணைகள் நிரம்பி வழிவதால் கா்நாடக அணைகளின் உபரிநீா் மேட்டூா் அணைக்கு வரும் நீா்வரத்து நொடிக்கு 45,000 கனஅடியாக உயா்ந்துள்ளது.


காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கா்நாடக அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளன. இதையடுத்து கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு வரும் மழைநீா் முழுவதும் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.


தற்போது கா்நாடக அணைகளிலிருந்து நொடிக்கு சுமார் 60,000 கனஅடி வீதம் தண்ணீா் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. கா்நாடக அணைகளின் உபரிநீா் வியாழக்கிழமை மாலை முதல் மேட்டூா் அணைக்கு வரத் தொடங்கியுள்ளது. நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால், வெள்ளிக்கிழமை மாலை அணையின் நீா்மட்டம் 67.97 அடியாக உயா்ந்தது.

இந்நிலையில், இன்றைய நிலவரப்படி, மேட்டூா் அணைக்கு வரும் நீா்வரத்து நொடிக்கு 45,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீா்மட்டம் 70.05 அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக நொடிக்கு 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் தற்போது 32.74 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top