லெபனான் வெடிவிபத்து; தமிழகத்தில் 740 டன் அமோனியம் நைட்ரேட்! சேமிப்புக்கிடங்கில் அதிகாரிகள் ஆய்வு!

லெபனான் வெடிவிபத்து எதிரொலியாக, மணலியில் அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டுள்ள சேமிப்புக்கிடங்கில் தீயணைப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ருட்டில் சேமிப்புக் கிடங்கில் டன் கணக்கில் வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியது. இந்த வெடி விபத்து அந்த நகரத்தையே உருக்குலைத்ததோடு, பல உயிரிழப்புகளும் ஏற்பட்டது.

இந்நிலையில் லெபனான் வெடிவிபத்து எதிரொலியாக, இந்தியாவில் துறைமுகங்கள், சேமிப்புக் கிடங்குகள் உள்ளிட்ட இடங்களில் உள்ள வெடிக்கும் தன்மை உள்ள பொருட்கள் குறித்து ஆய்வு செய்து 48 மணி நேரத்தில் அறிக்கை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை மணலியில் அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டுள்ள சேமிப்புக்கிடங்கில் தீயணைப்பு துறை டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சேமிப்புக்கிடங்கில் கன்டெய்னர்களில் வைக்கப்பட்டுள்ள சுமார் 740 டன் அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் பாதுகாப்பாக உள்ளதாகவும், எனவே பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டுள்ள பகுதி சென்னையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதாகவும், அந்த பகுதியைச் சுற்றி சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு குடியிருப்பு பகுதிகள் எதுவும் இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள அமோனியம் நைட்ரேட் விரைவில் அப்புறப்படுத்தப்படும் எனவும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top