விவசாயிகள் எட்டுவழிச் சாலைக்கு எதிர்ப்பு: ஆடு, மாடு, கோழிகளுடன் போராட்டம்!

எட்டுவழிச் சாலை அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து, ஆடு, மாடு, கோழிகளுடன் ஏர் கலப்பை ஏந்தி கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் – சென்னை இடையிலான எட்டுவழிச் சாலை திட்டம் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் தொடங்க மத்திய அரசு திட்டம் வகுத்து, அதற்கான ஆயத்தப் பணியில் ஈடுபட்டது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.

இது தொடர்பான வழக்கு விசாணை உச்ச நீதிமன்றத்தில் நாளை (ஆக.6) வர உள்ள நிலையில், எட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்திட வேண்டும் என்றும் மேல்முறையீட்டு மனுவைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி, சேலம் மாவட்டம், பூலாவரி கிராமத்தில் இன்று (ஆக.5) விவசாய நிலத்தில் ஒன்று திரண்ட விவசாயிகள், ஆடு, மாடு, கோழிகளுடன், ஏர் கலப்பைகளை ஏந்தி, கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாய நிலங்களையும், இயற்கை வளங்களையும் அழித்து எட்டுவழிச் சாலை திட்டம் செயல்படுத்துவதை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். மேலும், உச்ச நீதிமன்றம் விவசாயிகளுக்குச் சாதகமான தீர்ப்பை வழங்கிட வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்து முழக்கமிட்டனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, “கடந்த பல தலைமுறையாக குருவி கூடுகட்டிச் சேர்ப்பது போல, உருவாக்கிய விவசாய நிலங்களை, மத்திய, மாநில அரசுகள், அழிக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது. இதனை நீதிமன்றம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. விவசாயிகளுக்கு ஆதரவாக நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம். காற்று மாசடைந்து வருவதும், ஏரிகளில் ஆலைக் கழிவு நீர் கலப்பது தொடர்பாகவும் அவசரச் சட்டம் பிறப்பிக்காமல், விவசாய நிலங்களை அழிக்க மட்டும் அவசரச் சட்டம் இயற்றுவது ஏற்புடையதல்ல” என்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top